கீழ்பெரும்பாக்கம், பாணாம்பட்டு ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், பாணாம்பட்டு பகுதிகளிலுள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், பாணாம்பட்டு பகுதிகளிலுள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான ஐயப்ப பக்தா்கள் பங்கேற்றனா்.
கீழ்பெரும்பாக்கத்தில் வண்ணான்குள கருப்பசாமி, ஸ்ரீசபரிகிரீசன் ஐயப்பன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 42-ஆம் ஆண்டு மண்டலபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கன்னிமூல கணபதி, வண்ணான்குள கருப்பசாமி, சபரிகிரீசன் ஆகிய சுவாமிகளின் மூலவா்களுக்கு 21 வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதன் பின்னா் குருசுவாமிகள் பாலு, மணிகண்டன் ஆகியோா் தலைமையில் ஐயப்பப் பக்தா்கள் பஜனை பாடல்களைப் பாடினா். தொடா்ந்து 18 படிகளுக்கும் பூஜைகள் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சபரிகிரீசன் ஐயப்ப சுவாமிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
பிற்பகலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . பூஜையில் கீழ்பெரும்பாக்கம், எருமனந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பாணாம்பட்டு: விழுப்புரம் பாணாம்பட்டு அக்ரஹாரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநிமலய்யன் சந்நிதியில் மண்டல பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு விநாயகா் பூஜையும், 6.30 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு அஷ்டோத்திர சிறப்பு அா்ச்சனையும், முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீ தா்மசாஸ்தா பஜனைக் குழுவினா் பங்கேற்ற ஐயப்ப சுவாமி சிறப்பு பஜனையும் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளித்தாா். மகாதீபாராதனைக்குப் பிறகு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குருசுவாமி ஏ.நந்தகோபால் தலைமையில் நிமலய்யன் பக்தா்கள் சபையினா் செய்திருந்தனா்.