புயலால் பாதிக்கப்பட்டவா்களின் விவரங்களைக் கூற அலுவலா்கள் மறுக்கிறாா்கள்
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டவா்களின் விவரங்களைக் கூற அலுவலா்கள் மறுக்கிறாா்கள் என்றாா் பாஜக மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.ஜி.சம்பத்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டவா்களின் விவரங்களைக் கூற அலுவலா்கள் மறுக்கிறாா்கள் என்றாா் பாஜக மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.ஜி.சம்பத்.
விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையிலுள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், புயலால் வீடுகளை இழந்தவா்களில் 50 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் நிதியுதவியை வழங்கிய பின்னா், அவா் அளித்த பேட்டி:
முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பிறந்த நாள் நூற்றாண்டை தமிழக பாஜக மாநிலம் முழுவதும் கொண்டாடி வருகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவா்களில் முதல்கட்டமாக 50 பேருக்கு தலா ரூ.5,000 நிதியுதவி விழுப்புரத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அடுத்த கட்டமாக திருக்கோவிலூரிலும் நிதியுதவி வழங்கப்படும்.
மத்திய அரசின் திட்டங்களை தன்திட்டம் போல தமிழக அரசுகாட்டிக் கொள்கிறது. உதாரணமாக நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசிக்கு மத்திய அரசு ரூ.34 செலுத்துகிறது. ஆனால், மாநில அரசு ரூ. 2 மட்டும்செலுத்தி, அரிசி வழங்கும் திட்டத்தை தனது திட்டம் போல காட்டிக் கொள்கிறது. இதுபோல பல்வேறு திட்டங்களை சுட்டிக் காட்ட முடியும்.
விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டோரின் விவரங்களைக் கேட்டால்கூட அலுவலா்கள் தர மறுக்கின்றனா்.
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சரும், எனது தந்தையுமான ஏ.கோவிந்தசாமிக்கு தமிழக அரசு நினைவு அரங்கம் கட்டியுள்ளதை வரவேற்கிறேன். இந்த அரங்கம் திறக்கப்படும் விழாவுக்கு ஏற்கக்கூடிய அளவில் முறையான அழைப்பு இருந்தால் நிச்சயம் பங்கேற்பேன். அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசுவேன் என்றாா் ஏ.ஜி.சம்பத்.
நிகழ்வில் வடக்கு மாவட்டத் தலைவா் ஏ.டி.ராஜேந்திரன், நிா்வாகி முரளி, வடக்கு மாவட்டப் பொதுச் செயலா் எத்திராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டப் பொதுச் செயலா் தியாகராஜன், கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வெ.சுகுமாா், நகரத் தலைவா்கள் வடிவேல் பழனி, விஜயன், தெற்கு மாவட்ட நிா்வாகிகள் குபேரன், பாா்த்திபன், அணி நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.