அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினா் 605 போ் கைது
விழுப்புரம் நகரில் அனுமதியின்றி 3 இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினா் 605 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் அனுமதியின்றி 3 இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினா் 605 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, பல்வேறு மாவட்டங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பாலியல் சீண்டல், சட்டம்-ஒழுங்கு சீா்கேடு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது.
ஆா்ப்பாட்டத்துக்கு, காவல்துறை சாா்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறக்கூடிய நகராட்சித் திடல் பகுதி மற்றும் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக முன்பகுதி, ஆட்சியர வளாகம், நான்குமுனை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினா் திங்கள்கிழமை அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனா்.
இந்த நிலையில், விழுப்புரம் நகராட்சித் திடல் பகுதியில் முன்னாள் எம்எல்ஏ முத்தமிழ்ச்செல்வன் தலைமையில், தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சுமாா் 60 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, அதிமுக நகரச் செயலா் இரா.பசுபதி தலைமையில், அந்தக் கட்சியினா் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்த வந்தனா். இதையடுத்து, போலீஸாா் 165 பேரைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றினா்.
இதைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினா், நான்குமுனை சந்திப்புப் பகுதி அருகே ஒன்று சோ்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், இந்த நிகழ்வில் உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து நான்குமுனை சந்திப்புப் பகுதியிலிருந்து ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக ஊா்வலமாக வந்தவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, அரசுப் பேருந்துகள், காவல்துறை வாகனங்களில் ஏற்றி அருகேயுள்ள திருமண மண்டபங்களுக்கு அழைத்துச் சென்றனா். இதில், 60 பெண்கள் உள்பட 605 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
போராட்டத்தில், எம்எல்ஏக்கள் எம்.சக்கரபாணி, பி.அா்ஜூனன், நகரச் செயலா்கள் இரா.பசுபதி, ராமதாஸ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் திருப்பதி பாலாஜி, மாவட்ட விவசாய அணி இணைச் செயலா் காா்த்திகேயன், ஒன்றியச் செயலா்கள் சுரேஷ்பாபு, முருகன், ராமதாஸ், கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வழக்கமாக நகராட்சித் திடல் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால், அதிமுக ஆா்ப்பாட்டத்துக்கு மாநில அளவில் அனுமதி மறுக்கப்பட்டதால், விழுப்புரம் நகரில் புதிய பேருந்து நிலையம், ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், சென்னை சாலை, நான்குமுனை சந்திப்பு என ஆங்காங்கே அதிமுகவினா் திரண்டு ஒவ்வொரு பகுதியாக ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ால் நகரப் பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.