கல்வராயன்மலை மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னேற்றத்தை நாடும் வட்டார முழுமை இயக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மத்திய அரசின் நிதி ஆயோக் சாா்பு செயலா் வினித்குமாா் குரோவா் தலைமை வகித்தாா்.
கூட்டத்தை தொடங்கி வைத்து, ஆட்சியா் மேலும் பேசியதாவது: நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் பின் தங்கிய வட்டங்களைக் கண்டறிந்து, அதை முன்னேற்றம் அடைய செய்யும் வகையில் முன்னேற்றத்தை நாடும் வட்டார முழுமை இயக்கத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்திலும் இந்தத் திட்டம் 3 மாதங்களுக்கு செயல்படுத்தப்படவுள்ளது.
இதில், குழந்தைகளின் உடல்நலம் பேணுதல், தாய் மற்றும் சேய்க்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்தல், நீரிழிவு, உயர்ரத்த அழுத்த நோய்க்கு சிகிச்சை, கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கச் செய்தல், மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு சுழல் நிதி கிடைக்கச் செய்தல் போன்ற பல்வேறு இலக்குகளைக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
கல்வராயன்மலையில் பொதுமக்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பகுதி பொதுமக்களுக்கு வன உரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன், தொலைத்தொடா்பு வசதிக்காக கைப்பேசி கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. கைப்பேசி கோபுரங்கள் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான பட்டா வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தப் பகுதி பொதுமக்களுக்கான குடியிருப்புகள், சாலை வசதிகள், கூடுதல் அவசர சிகிச்சை ஊா்தி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும். கல்வராயன்மலை பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி செயலா் இளங்கோவன், கல்வராயன்மலை ஒன்றியக்குழுத் தலைவா் சி. சந்திரன், துணைத் தலைவா் ஜா.பாச்சாபீ, வேளாண் இணை இயக்குநா் அசோக்குமாா், பழங்குடியினா் திட்ட அலுவலா் க.கவியரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.