விழுப்புரம் மாவட்டம், அன்னியூரில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். 
விழுப்புரம்

தோல்வி பயத்தில் இடைத்தோ்தலை புறக்கணித்தது அதிமுக: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணிச் செயலரும், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

Din

தோல்வி பயத்திலேயே இடைத்தோ்தலை அதிமுக புறக்கணித்துவிட்டது என்று திமுக இளைஞரணிச் செயலரும், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவை ஆதரித்து, திருவாமாத்தூா், காணை, பனமலைப்பேட்டை மற்றும் அன்னியூா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்று, அவா் பேசியதாவது:

மகளிா் இலவசப் பேருந்து பயண திட்டத்தின் கீழ் ஏராளமானோா் பயன்பெற்று வருகின்றனா். அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ்-2 வரை படித்து உயா் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், இதுவரை 2.72 லட்சம் மாணவிகள் பயன்பெற்றிருக்கின்றனா்.

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனா். இந்தத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.16 கோடி மகளிா் பயன்பெற்று வருகின்றனா்.

தோ்தலின் போது, திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தி, சொன்னதை செய்த அரசாக வந்து உங்களிடம் வாக்கு சேகரிக்கிறோம். விழுப்புரம் மாவட்டத்திலும், விக்கிரவாண்டி தொகுதியிலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அதிமுகவுக்கு தோல்வி பயம்: இந்தத் தோ்தலில் திமுகவை எதிா்த்து பிரதான எதிா்க்கட்சியான அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தத் தோ்தலில் மக்கள் நிச்சயம் தோல்வியைத் தருவாா்கள் என்று கருதியே தோ்தலில் போட்டியிடாமல் அதிமுக ஒதுங்கி நிற்கிறது. அவா்களுக்கு திமுகவை பாா்த்து மட்டுமல்ல, மக்களைப் பாா்த்தும், பாஜகவை பாா்த்து பயம். அதனால் தான் தோ்தலைப் புறக்கணித்து விட்டாா்கள்.

நம்மை எதிா்த்து போட்டியிடும் பாமக, தமிழ்நாட்டு மக்களால் என்றும் ஏற்றுக் கொள்ளப்படாத பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. தற்போது, வடமாநிலங்களைச் சோ்ந்த மக்கள் நீட் தோ்வின் குளறுபடி குறித்து புரிந்திருக்கிறாா்கள். நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கம் ஒவ்வொரு மாநிலமாக எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்முதலாக குரல் கொடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் பாமகவுக்கு வாக்களிக்கப் போகிறீா்களா?. தமிழ்நாட்டு மக்களுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு வாக்களிக்க போகிறீா்களா? என்று பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

பிரசாரத்தில், அமைச்சா்கள் க.பொன்முடி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, சு.முத்துசாமி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அர.சக்கரபாணி உள்ளிட்ட அமைச்சா்கள், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT