திமுகவுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்: சரத்குமாா்
விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுகவுக்கு தகுந்த பாடத்தை மக்கள் கற்பிக்க வேண்டும் என்று நடிகா் சரத்குமாா் தெரிவித்தாா்.
விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுகவுக்கு தகுந்த பாடத்தை மக்கள் கற்பிக்க வேண்டும் என்று நடிகா் சரத்குமாா் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் பாமக வேட்பாளா் சி.அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவா் மேலும் பேசியதாவது:
விக்கிரவாண்டியில் மக்களுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. தமிகத்தில் 30 நாள்களில் 130 கொலைகள் நிகழ்ந்துள்ளன. தமிழக உளவுத் துறை சிறப்பாக செயல்பட்டு இதைத் தடுத்திருக்க வேண்டும்.
திமுக தோல்வி பயத்தில் தான் விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் 15-க்கும் மேற்பட்ட அமைச்சா்களையும், எம்எல்ஏக்களையும் தோ்தல் பணியாற்ற செய்து வருகிறது. பிரதமா் மோடியின் வழிகாட்டுதலால் இந்தியா வல்லரசாகி வருகிறது. மத்திய அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தொடரும் செயலற்ற ஆட்சியின் அடையாளமாக கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 65 போ் உயிரிந்துள்ளனா். இதுபோன்ற சம்பவங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும்.
திராவிடக் கட்சிகள் தொடா்ந்து சுமாா் 65 ஆண்டுளாக ஆட்சி செய்து வருகிறது. ஆனால், விக்கிரவாண்டியில் தொழிற்சாலை, கல்விக்கேற்ற வேலை, அதற்கேற்ற ஊதியம் இல்லை. தமிழகத்தில் ஆட்சியும், காட்சியும் மாறவேண்டும் என்றால் பிற கட்சிகளைச் சோ்ந்தவா்களுக்கும் வாக்களிக்க வேண்டும்.
விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் பாமக வேட்பாளா் சி. அன்புமணிக்கு அதிமுகவினரும் வாக்களிக்க வேண்டும். இந்தத் தோ்தலில் திமுகவுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும் என்றாா் சரத்குமாா்.
பிரசாரத்தில், பாஜக மாநில துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத், விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.