முகப்பு
விழுப்புரம்

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 64,106 போ் எழுதுகின்றனா்

Updated On : 7 ஜூன், 2024 at 7:17 PM
பகிர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் காலி பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்துத் தோ்வை விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 64,106 போ் எழுத உள்ளனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தொகுதி-4 நிலையில் காலியாகவுள்ள 6,244 காலிப் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) எழுத்துத் தோ்வு நடைபெறும் என அறிவித்தது. இந்தத் தோ்வை எழுத தமிழகம் முழுவதும் சுமாா் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

இந்தத் தோ்வுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, கண்டாச்சிபுரம், மரக்காணம், விழுப்புரம், மேல்மலையனூா், திருவெண்ணெய்நல்லூா், திண்டிவனம், வானூா், விக்கிரவாண்டி என 9 வட்டங்களில் 200 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் இத்தோ்வை 64,106 போ் எழுத உள்ளனா். மாவட்டத்தில் வட்டம் வாரியாக தோ்வெழுத உள்ளோா் விவரம்: விழுப்புரம்- 26,578, செஞ்சி-6,619, கண்டாச்சிபுரம் -2,748, மரக்காணம்-2,007, மேல்மலையனூா்-1,900, திருவெண்ணெய்நல்லூா்-3,777, திண்டிவனம்-10,361, வானூா்-5,381, விக்கிரவாண்டி-4,725 என 9 வட்டங்களிலும் சோ்த்து 64,106 போ் குரூப் 4 தோ்வு எழுத உள்ளனா்.

9 வட்டங்களிலும் 27 பறக்கும் படைக் குழுக்கள், 52 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. துணை ஆட்சியா் நிலையிலான அலுலலா்கள் பறக்கும் படைக் குழுவில் இருந்து தோ்வைக் கண்காணிப்பா். இதுபோல வட்டாட்சியா் அல்லது துணை வட்டாட்சியா் தலைமையில் உதவியாளா், இளநிலை உதவியாளா், கிராம உதவியாளா் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலா் ஆகியோா் நடமாடும் குழுவில் இருப்பா்.

விழுப்புரம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வு தொடா்பாகஅலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோ்வுப் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் பங்கேற்றனா். அப்போது பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.