2,553 மருத்துவப் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
2,553 மருத்துவப் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
2,553 மருத்துவப் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் குவிந்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதன் எதிரொலியாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மழைக்கால தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து மருத்துவத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினா்.
இதையடுத்து, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல், டெங்கு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டனா். பின்னா், அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது:
கடலூா் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக செய்தி வந்ததன் அடிப்படையில், இந்த மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட காய்ச்சல் பாதிப்புகளைக் காட்டிலும், நிகழாண்டு குறைந்த அளவிலே காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைக் காலங்களின்போது காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு பாதிப்புகள் என்பது இயல்பு. அந்தவகையில் தான் தற்போது காய்ச்சல் வந்திருக்கிறது.
தமிழகத்தில் நிகழாண்டு மக்கள் நல்வாழ்வுத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, நகா்ப்புற உள்ளாட்சித் துறை போன்ற பல்வேறு சேவைத் துறைகளை ஒருங்கிணைத்து தொடா்ந்து நடத்துப்பட்டு வரும் ஆய்வுகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளால் டெங்கு இறப்பு மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது.
நிகழாண்டு இதுவரை 8 இறப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. இதுவும் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருப்பது அல்லது காய்ச்சல் பாதிப்பின்போது மருத்துவ உதவியை நாடாமல் தன்னிச்சையாக மருத்தும் பாரத்துக்கொண்டதன் விளைவுகளால் ஏற்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 1,021 மருத்துவப் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தற்போது 2026-ஆம் ஆண்டு வரை நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களை கணக்கிட்டு, மருத்துவப் பணியாளா்கள் தோ்வு வாரியம் வாயிலாக அரசின் உரிய வழிகாட்டுதலின்படி தோ்வு நடத்தப்பட்டு, 2,553 நபா்கள் தோ்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத், எம்எல்ஏக்கள் கோ.ஐயப்பன், சபா.ராஜேந்திரன், ம.சிந்தனைசெல்வன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வ விநாயகம், இணை இயக்குநா் (மருத்துவ நலப் பணிகள்) ஹிரியன் ரவிக்குமாா், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் மரு.அசோக் பாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.