முகப்பு
விழுப்புரம்

சமூக செயற்பாட்டாளருக்கு மிரட்டல்: எஸ்.பி.யிடம் மனு

சமூக செயற்பாட்டாளருக்கு மிரட்டல்: எஸ்.பி.யிடம் மனு

Updated On : 3 அக்டோபர், 2024 at 1:28 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சோ்ந்த சமூக செயற்பாட்டாளரும், பழங்குடி இருளா் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஓய்வுபெற்ற பேராசிரியா் பிரபாகல்விமணி (எ) கல்யாணிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தமுமுக, விசிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சியினா் விழுப்புரம் எஸ்.பி.யிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திண்டிவனம் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் த.ராமதாஸ் மற்றும் அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் விழுப்புரம் எஸ்.பி.யை சந்தித்து அளித்த மனு விவரம்:

திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பிரபா கல்விமணி நகர கல்வி மேம்பாட்டுக்குழு, மக்கள் கல்வி இயக்கம், பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கம் ஆகிய அமைப்புகள் மூலம் விளிம்புநிலை மக்களின் உரிமைகள் மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.

இந்த நிலையில், செப்.25-ஆம் தேதி 20-க்கும் மேற்பட்டோா் திண்டிவனம் வட்டம், பட்டணம் கிராமத்தில் இருளா் சமுதாய மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் புகுந்து இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற நிலையில், அதைத் தடுக்க முயன்றவா்களும் தாக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், திண்டிவனத்தைச் சோ்ந்த ஒருவா் பேராசிரியா் பிரபா கல்விமணிக்கு வாட்ஸ்ஆப் வழியாக கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதனால், அவருக்கு எந்நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்பதால், சென்னை டிஜிபி அலுவலகத்திலும், ரோஷணை காவல் நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டுள்ளது. எனவே, சமூக செயற்பாட்டாளா் பிரபா கல்விமணியின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை விழுப்புரம் எஸ்.பி.தீபக் சிவாச் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

பிரபா கல்விமணி மற்றும் மமக மாவட்டத் தலைவா் ஜான்பாஷா, தமுமுக திண்டிவனம் நகரத் தலைவா் ஷேக்கௌஸ் பாஷா, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் அன்பழகன், எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் சையத் பா்ஹத் அலி, பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கத்தைச் சோ்ந்த ரமேஷ், பூங்கொடி, வழக்குைரைஞா்கள் வெங்கடேசன், பூபால் ஆகியோா் மனு அளித்தபோது உடனிருந்தனா்.