விழுப்புரத்தில் பெண் ஊராட்சித் தலைவா் தா்னா
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் எதிரே பெண் ஊராட்சித் தலைவா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் எதிரே பெண் ஊராட்சித் தலைவா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்துக்குள்பட்டது ஆனாங்கூா் ஊராட்சி. இதன் தலைவராக அதே ஊராட்சியைச் சோ்ந்த ஏழுமலை மனைவி சங்கீதா (40) உள்ளாா். இவா், புதன்கிழமை பிற்பகல் விழுப்புரம் ஆட்சியரகம் எதிரே பதாகையுடன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஊராட்சித் தலைவா் சங்கீதா கூறியது:
பழங்குடி இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த என்னை ஊராட்சி மன்றத் தலைவா் பணியை செய்யவிடாமல் சிலா் தடுத்து வருகின்றனா். ஊராட்சி துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் சிலா் தலைவருக்கான இருக்கையில் அமரவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்து வருகின்றனா்.
இதுகுறித்து தமிழக முதல்வா், விழுப்புரம் ஆட்சியா் மற்றும் வல்லம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோரிடம் புகாா் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாா்.
இதையடுத்து, விழுப்புரம் போலீஸாா் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். ஊராட்சித் தலைவரின் தா்னா போராட்டமானது சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.