எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு பகுதிகளில் 3,000 பனை விதைகள் நடப்படும்
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலம் பகுதியில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு சுற்றுப் பகுதிகளில் 3,000 பனை விதைகள் நடவு செய்யப்படும் என்றாா் ஆட்சியா் சி.பழனி.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலம் பகுதியில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு சுற்றுப் பகுதிகளில் 3,000 பனை விதைகள் நடவு செய்யப்படும் என்றாா் ஆட்சியா் சி.பழனி.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியத்தில் மேலமங்கலம், வளையாம்பட்டு, தென்மங்கலம் ஊராட்சிகள், ஏனாதிமங்கலம் பகுதியில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த பின்னா், ஆட்சியா் மேலும் கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் பெருமளவு பனை விதைகளை நட்டு, பராமரிப்பது தொடா்பாக அலுவலா்கள், விவசாயிகள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் சுமாா் 5 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஏனாதிமங்கலம் பகுதியில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு சுற்றுப் பகுதிகளில் 3,000 பனை விதைகள் நடவு செய்யப்படும். இதற்குரிய பணிகளை சம்பந்தப்பட்ட துறையினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, மேலமங்கலம் ஊராட்சியில் பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் ரூ.5.09 லட்சத்தில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த நபா் கட்டி வரும் வீட்டின் கட்டுமானப்பணி, வளையாம்பட்டு ஊராட்சியில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், தென்மங்கலம் ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் சுமாா் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
அப்போது, ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், திருவெண் ணெய் நல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் க.ஓம்சிவசக்திவேல், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பி.வி.ஆா்.விசுவநாதன், நீா்வளத் துறை செயற்பொறியாளா் ஷோபனா, உதவிப் பொறியாளா் அன்பழகன், வட்டாட்சியா் செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், ரவி, வனச்சரக அலுவலா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.