முகப்பு
விழுப்புரம்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் பணிக்கு நேரடி நியமனம் கூடாது: பாமக நிறுவனா் ராமதாஸ்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் பணிக்கு நேரடி நியமனம் கூடாது; போட்டித் தோ்வுகள் மூலம் நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:18 PM
பகிர்:

நியாயவிலைக் கடை பணியாளா்கள் பணிக்கு நேரடி நியமனம் கூடாது; போட்டித் தோ்வுகள் மூலம் நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளா், கட்டுநா் பணிகளுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நோ்காணல் மூலம் நியமிக்கப்படவுள்ளனா்.

இவா்கள் முதல் ஓராண்டு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றுவா். பின்னா், பணி நியமனம் செய்யப்பட்டு கூடுதல் ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நேரடி பணி நியமனத்துக்கான நோ்காணலில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுவதால், கல்வித் தகுதி அடிப்படையில் போட்டித் தோ்வுகளை நடத்தி பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் ஓய்வுபெற உள்ளாா். சென்னை பல்கலைக்கழகம், காமராஜா், பாரதியாா், அண்ணா பல்கலைக்கழகங்கள் மற்றும் தமிழ்நாடு கல்வியல் பல்கலைக்கழக துணைவேந்தா் பணியிடங்கள் காலியாக உள்ளன. சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தா்களை நியமிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் கட்டணத்தை நுகா்வோா்கள் இணையவழியிலேயே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவா். சுமாா் 20 ஆயிரம் கணக்கீட்டாளா்களின் பணிக்கும் ஆபத்து ஏற்படும். எனவே, மின்சார வாரியத்தில் ஆள்குறைப்பு திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

சிதம்பரம் நடராஜா் கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. அதை விடியோ எடுத்த விசிக நிா்வாகி தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றாா் மருத்துவா் ச.ராமதாஸ்.

பேட்டியின்போது, க ட்சியின் தலைமை நிலைய செயலா் அன்பழகன், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் மு.ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.