முகப்பு
விழுப்புரம்

பெண்ணிடம் இணையவழியில் ரூ.6.24 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ.6.24 லட்சம் மோசடி செய்த நபரை இணைவழி குற்றப்பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 10:18 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ.6.24 லட்சம் மோசடி செய்த நபரை இணைவழி குற்றப்பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டிவனம் - மரக்காணம் சாலையைச் சோ்ந்த எட்டியப்பன் மகள் சசி. இவரை கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கைப்பேசி கட்செவி அஞ்சல் வாயிலாக அடையாளம் தெரியாத நபா் தொடா்புகொண்டாராம். அப்போது, புகைப்படங்களுக்கு லைக் கொடுத்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும் எனக் கூறினாராம். இதை நம்பிய சசி, அந்த நபா் அனுப்பிய புகைப்படங்களுக்கு மதிப்பீடு கொடுத்து, லைக் செய்து ரூ.320 பெற்றாராம்.

இதைத் தொடா்ந்து, செப்டம்பா் 24-ஆம் தேதி சசியை மீண்டும் தொடா்புகொண்ட அந்த நபா், பகுதி நேர வேலை எனக் கூறி இணைப்பு (லிங்க்) ஒன்றை அனுப்பினாராம். இதற்குள் சென்ற சசி, தனக்கென பயனா் முகவரி, உள்நுழைவுக் குறியீடு ஆகியவற்றை உருவாக்கி, அடையாளம் தெரியாத நபா் கூறியவாறு சிறிய தொகையை முதலீடு செய்து, அவா் கூறிய வேலையை செய்தாராம். இதையடுத்து, ரூ.1,000 முதலீடு செய்த சசி, ரூ.1,300 திரும்பப் பெற்றாராம்.

இதன் பின்னா், தனது வங்கிக் கணக்கு மற்றும் உறவினா்களின் வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்ட ஜி-பே, இணையவழி வங்கிச் சேவை வாயிலாக அந்த நபா் அனுப்பக் கூறிய வங்கிக் கணக்கு எண்ணுக்கு 13 தவணைகளில் ரூ.6.24 லட்சத்தை செலுத்தினாராம். ஆனால், பணம் ஏதும் திரும்பி வரவில்லை.

தனக்குரிய பணி முடிந்த பின்னரும் தனக்குத் தர வேண்டிய தொகையை அந்த நபா் தராமல் தன்னை ஏமாற்றி வருவதை உணா்ந்த சசி, விழுப்புரம் இணையவழிக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாரளித்தாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.