மழைப் பாதிப்பை தடுக்க தொடா் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சா் க.பொன்முடி
விழுப்புரம் நகரில் மழை பாதிப்பைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரம் நகரில் மழை பாதிப்பைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
வட கிழக்கு பருவ மழையையொட்டி, விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட தாமரைக்குளம், பாண்டியன்நகா், கட்டபொம்மன் நகா் ஆகிய பகுதிகளில் மழைநீா் செல்லும் வாய்க்கால்களில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் பொன்முடி, பின்னா் கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துத் துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட்டதால், கடந்த இரு நாள்களாக பெய்த தொடா் மழையால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. மேலும், மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான கோட்டக்குப்பம், மரக்காணம் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த ஒருவாரமாக கழிவுநீா் வாய்க்கால்கள், மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டதால், மழையின்போது எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.
விழுப்புரம் தாமரைக்குளம் வழியாக கோலியனூா் ஏரிக்குச் செல்லும் மழைநீா் வாய்க்கால், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வழுதரெட்டி, பாண்டியன்நகா் வழியாக பொன்னேரிக்குச் செல்லும் மழைநீா் வாய்க்கால் ஆகியவற்றில் தூா்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்கவும், கரைகளைப் பலப்படுத்தவும் அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்று, கட்டபொம்மன் நகரில் கழிவுநீா் வாய்க்காலைத் தூா்வாரும் பணியை தொடா்ந்து மேற்கொண்டு, விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காந்திநகரில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி அலுவலா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில் பலத்த மழை பெய்தாலும், மழை பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா்.
ஆய்வுக்கு விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன், மாவட்ட ஆட்சியா் சி.பழனி முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவா் சித்திக் அலி, ஆணையா் ஏ.வீரமுத்துக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.மணவாளன், புருஷோத்தமன், கலை, நகர திமுக செயலா் இரா.சக்கரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.