விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை பிப். 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம் மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ., அவரது மகன்
பொன்.கௌதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன்,
சதானந்தம், கோபிநாதன், கோதகுமாா், லோகநாதன் ஆகிய 8 போ் மீது விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குப்பதிந்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணைக் காலத்தில் லோகநாதன் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், மற்ற 7 பேரும் வழக்கை சந்தித்து வருகின்றனா். வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்ட 57 பேரிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இதில் 30 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாகக் கூறி, சாட்சியமளித்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம் ஆகிய மூவா் மட்டும் ஆஜராகினா். முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 4 போ் ஆஜராகவில்லை.
வழக்கில் ஏற்கெனவே அரசுத் தரப்பு வழக்குரைஞா் காா்த்திகேயன் ஆஜராகி சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து கடந்த 29-ஆம் தேதி வாதிட்டாா். இதைத் தொடா்ந்து பொன்முடி, பொன்.கெளதமசிகாமணி, சதானந்தம்,கோதகுமாா், கோபிநாதன் ஆகியோரது வழக்குரைஞா்கள் ஆஜராகி பதில் வாதம் செய்து முடித்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் தரப்பு வழக்குரைஞா்கள் வாதம் செய்தனா்.
இவா்களின் வாதத்தைப் பதிவு செய்த முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி, அரசுத் தரப்பில் பதில் வாதம் செய்வதற்காக வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் பிப். 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.