பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு பிற்பகலுக்கு ஒத்திவைப்பு!
செம்மண் குவாரி முறைகேடு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது பற்றி...
விழுப்புரம்: செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் தீர்ப்பை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான அப்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி செம்மண் எடுக்கப்பட்டதன் மூலமாக, அரசுக்கு ரூ. 28.36 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறி புகார் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து அப்போதைய அமைச்சரும், தற்போதைய திமுக துணைப் பொதுச் செயலருமான க. பொன்முடி எம்.எல்.ஏ, அவரது மகன் பொன். கெளதம சிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீதும் 2012 ஆம் ஆண்டில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்தனர்.
Advertisement
Advertisement
இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட லோகநாதன் உடல்நலக்குறைவால் ஏற்கெனவே உயிரிழந்துவிட்ட நிலையில், மற்ற 7 பேரும் வழக்கை சந்தித்து வருகின்றனர். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளின் விசாரணை 2025, அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெற்றது.
வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 57 பேரில் 33 பேர் அரசுத் தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியளித்துள்ளனர். மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பில் சில சாட்சிகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டதன் அடிப்படையில், நீதிமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டு ஏற்கெனவே 4 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மார்ச் 2 ஆம் தேதி விசாரணை நடைபெற்ற போது, பொன்முடி உள்ளிட்ட 7 பேரின் வழக்குரைஞர்களும், அரசுத் தரப்பு வழக்குரைஞரும் ஆஜராகி வாதம் செய்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. மணிமொழி, வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்காக விசாரணையை ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.
கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகினர். தொடர்ந்து வழக்கில் பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாகக் கூறி முதன்மை மாவட்ட நீதிபதி ஆ. மணிமொழி உத்தரவிட்டார்.
Laterite Quarry Irregularities Case Against Ponmudi: Verdict Adjourned to Afternoon!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.