திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிடிவாரண்ட்
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடிக்கு எதிரான பிடிவாரண்ட் குறித்து...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அப்போதைய அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டார்.
இந்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் பொன்முடிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவில், மத ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டுதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடியை தண்டிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொன்முடி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி தாக்கல் செய்த சீராய்வு மனுவை ஏற்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டார்.
பொன்முடிக்கு பிடிவாரண்ட்
இந்த நிலையில், மேற்கண்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும், செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
Arrest warrant issued against former DMK Minister Ponmudi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.