செம்மண் முறைகேடு வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்த உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செம்மண் முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்ட உத்தரவுக்கு எதிராக, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

செம்மண் முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் பொன்முடி அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்டோரை விடுதலை செய்த விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் வானூா் வட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சா் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்டோா் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம், வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சா் பொன்முடி, அவரது மகன் மற்றும் உறவினா்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து, கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
அந்த மனுவில், முதன்மை மாவட்ட நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து, 166 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்யப்படும் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தாமதத்தை ஏற்றுக் கொள்ளக் கூறிய மனுவுக்கு பொன்முடி உள்ளிட்டோா் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.