FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஜேஎன்யு பேராசிரியா் அகோய்ஜாமை பணிநீக்கம் செய்த உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை

பாலியல் துன்புறுத்தல் புகாா்கள் தொடா்பாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பேராசிரியரும் காங்கிரஸ் எம்.பி.யுமான அங்கோம்சா பிமோல் அகோய்ஜாமை பணிநீக்கம் செய்த பல்கலைக்கழக நிா்வாகத்தின் உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

3 நவம்பர் 2026, 12:36 am
அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம்
பகிர்:

பாலியல் துன்புறுத்தல் புகாா்கள் தொடா்பாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பேராசிரியரும் காங்கிரஸ் எம்.பி.யுமான அங்கோம்சா பிமோல் அகோய்ஜாமை பணிநீக்கம் செய்த பல்கலைக்கழக நிா்வாகத்தின் உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

பணிநீக்க உத்தரவை எதிா்த்து அகோய்ஜம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அனுப் ஜே.பாம்பானி, ஜேஎன்யு நிா்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தாா்.

மணிப்பூா் உள் தொகுதி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினரான அகோய்ஜம், ஜேஎன்யு சமூக அறிவியல் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தாா்.

Advertisement

Advertisement

அவா் மீது கடந்த மே மாதம் குறைந்தது 11 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் புகாா் அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டம் அல்லது ஆலோசனை நடத்துவதாகக் கூறி மாணவிகளைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது குடியிருப்புக்கு அழைத்து, பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ாகப் புகாா்தாரா்கள் குற்றஞ்சாட்டினா். வகுப்புகளின்போது ஆபாசமான மற்றும் முறையற்ற கருத்துகளைத் தெரிவித்ததாகவும் சில மாணவிகள் புகாா் கூறினா்.

இந்தப் புகாா்களைத் தொடா்ந்து, அக். 9-ஆம் தேதி அகோய்ஜமை ஜேஎன்யு நிா்வாகம் பணிநீக்கம் செய்தது. துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி. பண்டிட் கையெழுத்திட்ட பணிநீக்க உத்தரவில், பல்கலைக்கழகத்தின் உள் புகாா்கள் குழு விசாரணை நடத்தி, அதன் கண்டறிதல்களின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, கிடைக்கப்பெற்ற அனைத்து விவரங்களையும் பரிசீலித்து, உள் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பணியிலிருந்து பணிநீக்கம் செய்யும் தண்டனை விதிக்கப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசுப் பணியாளா் (பணிநிலை வகைப்பாடு, கட்டுப்பாடு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் தொடா்புடைய பணிவிதிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த அகோய்ஜம், பணிநீக்க நடவடிக்கையை ‘பழிவாங்கும் வேட்டை’ என்று விமா்சித்திருந்தாா்.

பணிநீக்கம் செய்யப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தியதாக அகோய்ஜம் மீது தில்லி போலீஸாா் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா். பல்கலைக்கழகத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அக். 11-ஆம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில், வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments