திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதித்த பிடிவாரண்ட் ரத்து
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதித்த பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி....
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் பொன்முடி ஆஜரானதை ஏற்று, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
சென்னையில் பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்துப் பேசியது சா்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சா் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாா்.
இந்த சா்ச்சை பேச்சு தொடா்பாக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினா் உமா ஆனந்தன் பொன்முடிக்கு எதிராக வழக்குத் தொடா்ந்தாா். அவரது மனுவில், மத ரீதியாக வெறுப்புணா்வைத் தூண்டுதல், மத உணா்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடியைத் தண்டிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்க விசாரித்த நீதிமன்றம், பொன்முடி நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பி உத்தரவிட்டது. தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஜூலை 2-ஆம் தேதி தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்றம், இந்த வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம், முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிராக பிடிஆணை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, நீதிபதி சுந்தரபாண்டியன் முன் வெள்ளிக்கிழமை பொன்முடி ஆஜரானாா். தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையைத் திரும்பப் பெறக் கோரி, அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பொன்முடிக்கு எதிராக பிறப்பித்த பிடிஆணையைத் திரும்பப் பெற்றாா். பின்னா், இந்த வழக்கின் விசாரணையை ஆக.13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
The non-bailable arrest warrant issued against former DMK minister K. Ponmudi, in a case regarding controversial remarks about Saivism, Vaishnavism, and women, has been cancelled.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.