செல்லும் இடமெல்லாம் தவெக வேட்பாளருக்கு மக்கள் எதிர்ப்பு: டி.ஆர்.பி. ராஜா
முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பற்றி....
செல்லும் இடமெல்லாம் தவெக வேட்பாளரை மக்கள் துரத்துகின்றனர் என்று திமுக முன்னாள் அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் டி ஆர் பி ராஜா கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில், தேர்தலில் சமூக வலைதளங்களையும் தாண்டி, கொள்கைப் பிடிப்புதான் வெற்றியைத் தரும் என்பது எங்களுடைய நம்பிக்கை. இருப்பினும், தற்போதைய தேர்தல் சூழ்நிலையில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
Advertisement
Advertisement
குறிப்பாக, இப்போது உள்ள மக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களைச் சென்றடைவதில் சமூக ஊடகங்களுக்குப் பெரிய பங்கு உண்டு. களத்தில் இறங்கிப் பணியாற்றுவதில் திமுக தொண்டர்களைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. அதேபோல, இணையதளத்திலும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமன் மகத்தான வெற்றியைப் பெறுவார். அதற்காக நடத்தப்பட்ட கூட்டம்தான் இது. எதிரி போட்டி என்று பாராமல், திராவிடக் சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து நாங்கள் தேர்தலைச் சந்திப்போம். தற்போதுள்ள இருண்ட ஆட்சியை வீழ்த்தி, மதுராந்தகம் தொகுதியில் உதயசூரியன் உதிக்க வேண்டும்.
அந்த வெற்றி கிடைத்தால்தான் தமிழ்நாட்டை மீட்க முடியும். எதிரணியில் உள்ளவர்கள் கட்சி தாவி மீண்டும் போட்டியிடுகின்றனர். ஆனால், திமுகவினர் மட்டுமே நேராக மக்களிடம் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். களத்திற்குச் செல்லும் தவெக வேட்பாளரைச் செல்லும் இடமெல்லாம் மக்கள் துரத்தி வருகின்றனர்.
மாறாக, திமுக வேட்பாளர் செல்லும் இடமெல்லாம் மக்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது என்று தெரிவித்தார்.
Former DMK Minister TRB Rajaa stated that people are chasing away the TVK candidate wherever they go.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.