FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நீதிபதியின் அறச்சீற்றம்!

நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் பற்றிய நடுப்பக்கக் கட்டுரை....

9 செப்டம்பர் 2026, 4:12 am IST
நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

இந்திய நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் உலக அளவில் எடுத்தாளப்படுபவை. இருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக "யானைக்கும் அடி சறுக்கும்' என்ற பாணியில் சில தீர்ப்புகள் விவாதப் பொருளாகி விடுகின்றன. அது போன்ற விவாதங்கள் நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் நோக்கமுடையவையல்ல; சில விவாதங்கள் நீதிமன்றங்களின் பணியை மேலும் சிறந்ததாக்கும் நோக்கமுடையவை.

அப்படித்தான் "இன்பதுரை எதிர் அப்பாவு' வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும், அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் நாம் பார்க்க வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றம் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு இணையாக புதிய முயற்சிகளைச் செய்கிறது என எடுத்துக்கொள்ள வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெயச்சந்திரன் கிட்டத்தட்ட உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பு வழங்கும் கடமையைச் சரியாக செய்யவில்லை என்ற அறச் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற ராதாபுரம் சட்டப்பேரவைத் தேர்தலில் 5,925 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரையை தோற்கடித்து வெற்றி பெற்று அப்பாவு சட்டப்பேரவை உறுப்பினராகி, பேரவைத் தலைவராகவும் ஆனார். முன்னதாக, 2016-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் 49 வாக்குகளில் இன்பதுரையிடம் தோற்றதாக அப்பாவு அறிவிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

அதை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில், தனக்கு விழுந்த வாக்குகள் தவறாக தள்ளுபடியாகிவிட்டன என்றும், 19, 20, 21-ஆவது சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கைகளில் குளறுபடிகள் நடைபெற்றதாகவும், குறிப்பாக தனக்கு வந்த தபால் வாக்குகளில் நடுநிலைப் பள்ளித்தலைமை ஆசிரியரால் சான்று செய்யப்பட்டிருந்தும், அவற்றைத் தள்ளுபடி செய்தது சரியல்ல என்று தேர்தல் மனு எண். 2/2016 தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல; தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென இன்பதுரை தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மறு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது. சென்னையில் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு கொண்டிருந்தபோதே இன்பதுரை உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்ட, எண்ணிக்கை முடிவுகளை வெளியிடக்கூடாதென்றும், அவற்றை "சீல்' இட்ட உறையில் தனக்கு அனுப்ப வேண்டுமென உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மே 21 -ஆம் தேதி இறுதித் தீர்ப்பை வழங்கியது. மறு எண்ணிக்கையில் அப்பாவு 153 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் முன் இருந்த ஒரே பிரச்னை இடைநிலைப் பள்ளித் தலைமையாசிரியரால் சான்று அளிக்கப்பட்ட தபால் வாக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்பதுதான்.

இன்பதுரை தரப்பில் தபால் வாக்குகளைக் கணக்கில் எடுக்கக் கூடாது என்பதற்கு, அவை விதிகளின்படி கெஸடட் ஆபிஸரால் சான்று அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ராதாபுரம் தொகுதியில் அப்பாவுவிற்கு சாதகமாக விழுந்த தபால் வாக்குகள் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களால் மட்டுமே ஒப்பமிடப்பட்டிருக்கிறது. அவர்கள் கெஸடட் ஆபிஸர்கள் அல்லர்; ஆகவே அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்பாவு தரப்பில், வாக்காளரின் உண்மைத்தன்மையை சான்றளிப்பதற்கு நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியரும் ஒப்புவிக்கலாம் என்று வாதிடப்பட்டதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால்தான், பிரச்னை உச்சநீதிமன்றம் சென்றது. பல காரணங்களால் தடைபட்ட வழக்குக்கு தேர்தல் முடிந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, உச்சநீதிமன்றம் விசித்திரமான தீர்ப்பை வழங்கியது. அது சொன்னது, "இந்த வழக்கில் வழங்கும் தீர்ப்பால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை; இந்த வழக்கில் எழுந்த பிரச்னையை வேறு வழக்கில் தீர்மானிக்கலாம்' எனத் தீர்ப்பு வழங்கியது எனக்கே அதிர்ச்சியளித்தது என்றால், அந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதியரசர் ஜெயச்சந்திரனுக்கு அறச்சீற்றம் வந்ததில் வியப்பில்லை.

ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்ற தீர்ப்புகளை பொதுவாக விமர்சிப்பதில்லை. ஆனால், மேலமை நீதிமன்ற தீர்ப்புகளை விசாரணை நீதிமன்றங்கள் குறிப்பாக அனுசரித்து தீர்ப்பு வழங்க வேண்டுமென்ற விதிகள் இருந்தாலும், அதைப் பயன்படுத்தாமலிருக்க போகிற போக்கில் சொன்ன தவறான தீர்ப்பு என மறுதலிக்கலாம். ஆனால், நீதியரசர் ஜெயச்சந்திரன் அப்பாவுவிற்கு விழுந்த வாக்குகள் செல்லுமா, செல்லாதா என கருத்து சொல்லாமல் வழக்கை உச்சநீதிமன்றம் மீண்டும் முடிவுக்கு உயர்நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பியதால், முன் தீர்ப்பின்படி அப்பாவுவிற்கு விழுந்த வாக்குகளை ஏற்றுக்கொண்டு இன்பதுரையின் வெற்றியை ரத்து செய்து ராதாபுரம் தொகுதியில் 2016 தேர்தலில் அப்பாவு வெற்றி பெற்றதாக 2026-இல் அறிவித்தார்.

சட்டப்பேரவை ஆவணங்களில் 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதிக்கு அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டார் என ஆவணங்களைத் திருத்த வேண்டுமென்றும், இன்பதுரைக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஓய்வூதியம் கிடைக்கத்தக்கதல்ல என்றும் தீர்ப்பளித்தார். இதற்கிடையில் இன்பதுரை மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டதால் பண இழப்பு ஒன்றும் அவருக்கு இருக்கப் போவதில்லை.

இதற்கு முன்பு லால்குடி பேரவைத்தொகுதியில் வெங்கடாசலம், சேரன்மகாதேவி பேரவைத் தொகுதியில் வேல்துரை போட்டியிட்டு வென்ற தேர்தல்கள் ரத்து செய்யப்பட்ட போது, அவர்கள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது பெற்ற பணப் பலன்கள் அனைத்தையும் அரசுக்கு திரும்பச் செலுத்த வேண்டும் என்றும், வெங்கடாசலம் வாக்காளராகவே இல்லாதபோது மோசடி செய்து வெற்றி பெற்றதால் அவர் சட்டப்பேரவையில் அமர்ந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 500 அபராதம் செலுத்த வேண்டுமென்று ஆணையிட்டது உச்சநீதிமன்றம்.

ஆனால், அப்பாவு வழக்கில் தீர்ப்பு வழங்க ஏற்பட்ட காலதாமதத்துக்கு நீதிமன்றமும் பொறுப்பு என்பதால் இதுபோன்ற தண்டனை/அபராதம் இன்பதுரைக்கு விதிக்கப்படவில்லை எனக் கருதுகிறேன். நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தபால் வாக்குச்சீட்டு உறையில் ஒப்புகையிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன நிலையில், அது சரியா?, தவறா என்று சொல்ல வேண்டிய சட்ட கட்டாயம் உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறது.

இந்த சட்டப் பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பாக பதில் அளித்து தெளிவுபடுத்தி இருக்க வேண்டுமென நானும் கருதுகிறேன். அப்படி தீர்ப்பு வழங்கி இருந்தால் அது இந்தியா முழுமைக்குமான ஒரு தீர்ப்பாக இருந்திருக்கும். ஏற்கெனவே தீர்ப்பளித்துவிட்ட நிலையில் உயர்நீதிமன்றம் அந்தத் தீர்ப்பைப் பின்பற்றி அப்பாவுவை வெற்றி பெற்றதாக அறிவித்தது. உச்சநீதிமன்றம் காலதாமதத்தை காரணம் காட்டி மூன்று தேர்தல்கள் முடிந்துவிட்டதால் இந்தப் பிரச்னையில் தீர்ப்பு சொல்வதில் எந்தப் பலனுமில்லை என்று தன் பொறுப்பை தட்டிக் கழித்தது சரியல்ல.

அது சொல்லும் தீர்ப்பு ஆர்ட்டிகிள் 141-இன்படி இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்பதை அது கவனிக்கத் தவறிவிட்டது. காரணம், உச்சநீதிமன்றம் அதில் இறுதித் தீர்ப்பு வழங்கியிருந்தால் காலாகாலத்துக்கும், அது போன்ற தேர்தல் வழக்குகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சரியான முன்னுதாரணமாயிருக்கும்.

01.10.2019 சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பத்தி 46, 47-இல் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கொடுத்த சான்று செல்லும் என விரிவாக தீர்ப்பளித்து விட்டது. பத்தி 46-இல் ஒப்புகை வாங்குவதன் நோக்கம் வாக்காளர்களின் உண்மைத்தன்மையை மெய்ப்பிப்பதுதான், வாக்குச்சாவடியில் வாக்காளரின் உண்மைத்தன்மையை மெய்ப்பிக்க வாக்குச்சாவடி அதிகாரிகளும், வேட்பாளரின் முகவர்களும் இருக்கிறார்கள்.

தபால் வாக்குகளில் ஆள் மாறாட்டத்தைத் தவிர்ப்பதற்காக ஒப்புகை விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, 203 வாக்குகளை நிராகரிப்பது தேர்தலின் நோக்கத்துக்கு உகந்ததல்ல; ஆனால், உச்சநீதிமன்றம் இந்த வழக்கை 6 ஆண்டுகளுக்கும் மேல் வைத்திருந்துவிட்டு, சட்டப்பேரவை பணிக்காலம் முடிந்து விட்டது எனச் சொல்லி தீர்ப்பளிக்காமல் இருந்தது சரியல்ல; உயர்நீதிமன்றம் வாக்குச்சீட்டுகள் செல்லுமென தீர்ப்பளித்த பிறகு உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பு சரியா?, தவறா? என இறுதித் தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டுமென மிக்க மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நீதியரசர் ஜெயச்சந்திரன் சொன்னதை நான் ஓர் இந்திய குடிமகனாகவும், வாக்காளனாகவும் வழிமொழிகிறேன்.

தேர்தலில் ஒரு வாக்காளரின் வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டால் (கள்ள வாக்கு) உண்மையான வாக்காளருக்கு தேர்தல் சட்டம் ஓர் உரிமையை கொடுக்கிறது. அதன்படி, அவருக்கு டென்டர் வாக்கை (மறுக்கப்பட்ட வாக்கு) செலுத்தும் உரிமை உள்ளது. அவர் செலுத்தும் அந்த வாக்கு தனியாக உறையிலிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். வாக்கு எண்ணிக்கைகள் சமமாக இருந்து வெற்றி- தோல்விகள் நிர்ணயிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தால், நீதிமன்ற உத்தரவுப்படி அந்த டென்டர் (மறுக்கப்பட்ட) வாக்கு எண்ணப்படும்.

நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் சீனிவாச சேதுபதியிடம் அமைச்சர் பெரிய கருப்பன் ஒரு வாக்கில் தோற்றுப் போனார் என்பதிலிருந்தே வாக்குச் சீட்டின் வலிமை தெரிகிறது. இதைத்தான் இன்றைய முதல்வர் ஜோசப் விஜய் அவர் நடித்த "சர்கார்' திரைப்படத்தில் வலியுறுத்தினார்.

சட்டத்தில் அடிப்படைச் சட்டம் மற்றும் நடைமுறைச் சட்டம் என இரண்டு பிரிவுகள் உண்டு. நடைமுறைச் சட்டங்கள் என்பது நீதியின் வேலையாள்தான். ஆகவே சரியான வாக்காளர் அளித்த வாக்குச் சீட்டின் உறையின் மீதுள்ள ஒப்புகை சரியில்லை எனத் தள்ளுபடி செய்வது தேர்தலையே கேலிக்கூத்தாக்கும்.

கட்டுரையாளர்:

மூத்த வழக்குரைஞர்,

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments