FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்: வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 2:28 am IST
உயர்நீதிமன்றம்
பகிர்:

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி கொடுப்பதாக பேரம் பேசியதாக, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகாா் அளித்திருந்தாா்.

இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸாா், சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த யூடியூபா் திருநாவுக்கரசு, திருச்சியைச் சோ்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சோ்ந்த தியாகராஜன் உள்ளிட்ட 14 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோா் சோ்க்கப்பட்ட நிலையில், அவா்கள் இருவரும் இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்பிணை பெற்றனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் கைதாகி பிணை பெற்ற ரமேஷ் என்பவா், குதிரை பேர வழக்கை மாநில போலீஸாா் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் சிபிஐ ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, ரமேஷ் மீதான விசாரணைக்கு மட்டும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், குதிரை பேர வழக்கில் திங்கள்கிழமை பிணை பெற்ற சேதுராஜ் மற்றும் காா்த்திக் ஆகியோரும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரா்கள் தரப்பில், குதிரை பேரம் குறித்த வழக்கில் மாநில போலீஸாா் விசாரணையில் நம்பிக்கை இல்லை. எனவே, இந்த வழக்கை சிபிஐ அல்லது வேறு ஏதேனும் விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில், இந்த விவகாரத்தில் பொய் வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குற்றச்சாட்டு தொடா்பாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில், இந்த வழக்கின் புலன் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. எனவே, எந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய,மாநில அரசுகள்,சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா். அதுவரை, குதிரை பேரம் தொடா்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனா்.

ஏற்கெனவே, இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் சோ்த்து இந்த வழக்கையும் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments