FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

உணர்வுகளின் பிம்பம்!

புகைப்படக் கலை மட்டும் காலத்தையே சேமிப்பதற்காக உருவான கலை.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 6:30 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பொ. ஜெயச்சந்திரன்

மனிதன் கண்டுபிடித்த கலைகளில், சில கலைகள் பொழுதுபோக்குக்காக உருவானவை; சில அழகுக்காக உருவானவை. ஆனால், புகைப்படக் கலை மட்டும் காலத்தையே சேமிப்பதற்காக உருவான கலை. காலம் நகர்ந்து கொண்டே இருக்கும். காட்சிகள் மறைந்து கொண்டே இருக்கும். ஆனால், ஒரு புகைப்படம் மட்டும் கடந்த காலத்தை நிகழ்காலத்தின் கண்முன் நிறுத்திவிடும்.

புகைப்படத்தின் வரலாறு ஒரு கருவியின் வரலாறு மட்டுமல்ல; அது நான் பார்த்ததை என்றும், வைத்திருக்க வேண்டும் என்ற மனித ஆசையின் வரலாறு. அந்த மனிதன் ஒரு பொருளின் உருவத்தை ஒளி எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள பல நூற்றாண்டுகளாக முயன்றான். அந்தக் காலத்திலேயே ஒளியியல் முறையின் அடிப்படைக் கருத்துகள் அறியப்பட்டிருந்தன. பின்னர், அறிவியலின் வளர்ச்சி, வேதியியல் கண்டுபிடிப்புகள், ஒளியியல் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்தபோது, புகைப்படம் என்ற அற்புதக் கலை உருவெடுக்கத் தொடங்கியது.

Advertisement

Advertisement

200 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது, 1826-ஆம் ஆண்டு பிரான்ûஸச் சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான புகைப்படத்தை எடுத்தார். இதைத் தொடர்ந்து, லூயிசு டாகுவேரே என்பவர் டாகுரியோடைப் என்ற புகைப்படத்தின் செயல்முறையை வடிவமைத்தார். இந்த முயற்சிக்கு பிரான்ஸ் அகாதெமி 1839-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி அனுமதி அளித்தது. அதே ஆண்டில் அந்நாட்டு அரசு டாகுரியோடைப் என்ற செயல்பாட்டை உலக மக்கள் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என அறிவித்தது. அப்போது, லூயிசு டாகுவேரே போல்வர்டு தேவலாயத்தை புகைப்படமாக எடுத்தார்.

மேலை நாடுகளில் புகைப்படத் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே, அது இந்தியாவையும் வந்தடைந்தது. இந்திய மன்னர்கள், அரண்மனைகள், நகரங்கள், பழங்கால கட்டடங்கள், சமூக வாழ்க்கை, மக்கள் பண்பாடு, இயற்கைக் காட்சிகள் ஆகியவை புகைப்படங்களில் பதிவாக ஆரம்பித்தன.

சென்னை உள்ளிட்ட நகரங்களில், புகைப்பட ஸ்டூடியோக்கள் உருவான காலத்திலிருந்து, புகைப்படம் மெதுவாக மக்களின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறியது. திருமணம், காதணி விழா, பிறந்த நாள், பள்ளி விழா, கல்லூரி நிகழ்ச்சி, அரசியல் பொதுக்கூட்டம், சமூக நிகழ்வுகள் என வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியத் தருணங்களும் புகைப்படங்களில் பதிவாகத் தொடங்கின. அதிலும், பழைய ஸ்டூடியோ புகைப்படங்களுக்கு தனி அழகு.

ஒரு சமூகத்தின் வரலாற்றையும், ஒரு தலைமுறையின் வாழ்க்கை முறையையும், காலத்தின் பண்பாட்டையும் ஒரே புகைப்படம் பதிவு செய்து வைத்திருக்க முடியும். அதனால்தான் புகைப்படம் என்பது காலத்தை உறையச் செய்யும் கலை என்று அழைக்கப்படுகிறது.

பத்திரிகைத் துறையில் புகைப்படத்துக்கு இருக்கும் முக்கியத்துவம் அளப்பரியது. ஒரு செய்தியைப் படிக்கும்போது, நமக்கு தகவல் கிடைக்கிறது. அதே செய்தியுடன் ஒரு புகைப்படத்தை பார்க்கும்போது, அந்தச் சம்பவம் நம் மனதில் காட்சியாக மாறுகிறது.

புகைப்பட உலகின் மிகப் பெரிய புரட்சிகளில் ஒன்று, கைப்பேசி கேமராவின் வருகை. ஒரு காலத்தில் கேமரா வாங்க பணம் தேவைப்பட்டது. இன்று ஒரு கைப்பேசி வாங்கினாலே அதனுடன் கேமராவும் வருகிறது. குழந்தை முதல் முதியவர்வரை அனைவரும் புகைப்படக் கலைஞர்களாகி விட்டனர்.

முன்பு ஒரு குடும்பத்திடம் 50 புகைப்படங்கள் இருந்தாலும், ஒவ்வொன்றும் பொக்கிஷம். இன்று ஒருவரிடம் 5,000 புகைப்படங்கள் இருந்தாலும், பலவற்றை மீண்டும் பார்ப்பதே இல்லை. புகைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு புகைப்படத்துக்குமான பொறுமை குறைந்திருக்கிறது. அதனால்தான் பழைய ஆல்பத்திலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்துப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வு, கைப்பேசியை 'ஸ்க்ரோல்' செய்யும்போது ஏற்படுவதில்லை.

ஆல்பம் ஒரு குடும்பத்தின் அருங்காட்சியகம். பழைய ஆல்பத்தைத் திறப்பது என்பது ஒரு புத்தகத்தைத் திறப்பது அல்ல; அது ஒரு குடும்பத்தின் காலப் பெட்டகத்தைத் திறப்பது. ஒரு பக்கம் திருப்பினால் தாத்தா, மற்றொரு பக்கம் பாட்டி. அடுத்த பக்கத்தில் இளமைக் காலத் தந்தை. அதன் பிறகு தாயின் திருமண புகைப்படம். சில முகங்கள் இன்று நம்மிடையே இல்லை. ஆனால், புகைப்படத்தில் அவர்கள் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்; இதுதான் புகைப்படத்தின் அற்புதம். மனிதர்கள் மறைந்தாலும், அவர்களின் முகங்களை மறைய விடாமல் காப்பாற்றுகிறது புகைப்படம்.

ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் பிடித்தமான ஒரு புகைப்படம் என்பது வெறும் படம் அல்ல. அது ஒரு நினைவாக இருக்கலாம்; ஓர் உறவின் அடையாளமாக இருக்கலாம்; மறக்க முடியாத ஒரு நிகழ்வின் பதிவாக இருக்கலாம்; அல்லது வாழ்க்கையின் ஒரு முக்கியமான தருணத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும் காட்சியாக இருக்கலாம்.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி உலக புகைப்பட விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் மக்கள் தங்களுக்குப் பிடித்தமான புகைப்படங்களை சமூக ஊடகங்களில், பகிர்ந்து கொள்கின்றனர். சிலர் புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் புகைப்பட பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்கின்றனர். புகைப்படக் கலைஞர்கள் தங்களது சிறந்த படைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு, புகைப்படக் கலையின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments