அறிவியல் ஆயிரம்: பால் இல்லாத கருப்பு காபியில் ஒளிந்திருக்கும் ரகசிய சுவிட்ச்!
பாலில்லாத கருப்பு காபியில் ஒளிந்திருக்கும் ரகசியத்தைப் பற்றி...
நாள்தோறும் காலையில் குடிக்கும் பாலில்லாத கருப்பு காபி வெறும் புத்துணர்வு பானம் மட்டுமல்ல; உடலின் இயற்கை பாதுகாப்பு அமைப்பைத் தூண்டவும் உதவக் கூடும் என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாம் எடுத்துக்கொள்ளும் பாலில்லாத கருப்பு காபி நமது உடல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறதா? சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறதா? பார்க்கலாம்.
காலையில் காபியுடன் தொடங்கும் நாள்
Advertisement
Advertisement
"காலையில் ஒரு கப் காபி குடிக்காமல் நாள் தொடங்காது.. அப்படியென்று சொல்கிற கோடானுகோடி மக்களுக்கு ஒரு நல்ல செய்தி! என்ன தெரியுமா? நீங்கள் இதுநாள் வரைக்கும் காபி குடித்தது வெறும் தூக்கத்தை விரட்டுவதற்கு மட்டும் இல்லை என்பதுதான்; உங்கள் உடம்புக்குள் ஒரு ரகசிய "பாதுகாப்பு சுவிட்ச்"-ஐ வைத்துக்கொண்டு இருக்கிறீர்களே! இந்த உண்மை உங்களுக்குத் தெரியாதல்லவா?
ஆய்வக கண்டுபிடிப்பு
டெக்சாஸ் ஏ அன்ட் எம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், நாம் தினமும் குடிக்கும் கருப்பு காபி பானத்தில் ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிந்துள்ளனர். அதனை அவர்கள் நியூட்ரியன்ட்ஸ் - Nutrients என்ற இதழில் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வில் பொதிந்துள்ள உண்மை என்ன தெரியுமா? காபியில் இருக்கும் சில வேதிப்பொருள்கள், அதாவது அதன் பெயர், NR4A1 என்ற ஓர் உணர்வேற்பி (receptor), செயல்படுத்துவதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த NR4A1-ஐ, உடல் அழுத்தம், வீக்கம், சேதம் ஆகியவற்றிலிருந்து உயிரணுக்களைப் பாதுகாக்கும் ஒரு "காவலாளி" என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆய்வுக் குழுவின் தலைவர் டாக்டர் ஸ்டீஃபன் சேஃப், "காபிக்கு நல்ல ஆரோக்கிய குணங்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால், அது NR4A1 என்ற உணர்வேற்பியுடன் எப்படித் தொடர்பு கொள்கிறது என்பதே அந்த குணங்களுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்ற உண்மையை நாங்கள் வெளிப்படுத்தினோம்" என்கிறார்.
“NR4A1 - என்பது, ஓர் "அவசரகால உதவி" புரோட்டீன்
NR4A1-ஐ பற்றி டாக்டர் ஸ்டீஃபன் சேஃப், அதனை ஓர் "ஊட்டச்சத்து உணர்வி" எனக் கூறியிருந்தார். அதாவது, நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் வேதிப்பொருள்களுக்கு, NR4A1 பதிலளிக்கும். மேலும், நமக்கு வயதாகும்போதும் இது நம் உடம்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.
NR4A1-யின் காத்திரமான பணி
"உடலில் ஏதாவது திசு சேதமானால், NR4A1 உடனே அதிரடியாகக் களத்தில் இறங்கி அந்த சேதத்தைக் குறைக்கிறது. ஆனால் உணர்வேற்பி NR4A1-ஐ எடுத்துவிட்டால், சேதம் இன்னும் மோசமாகிடும்" என்கிறார் சேஃப்.
வீக்கம், வளர்சிதை மாற்றம், திசு பழுதுபார்ப்பு, இதெல்லாம் தவிரப் புற்று நோய், நரம்பியல் நோய்கள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற வயது தொடர்பான நோய்களுடன் நேரடியாகத் தொடர்புடையவை இந்த NR4A1. அப்படி என்றால், இந்த உணர்வேற்பியை ஒரு காபி எப்படிச் சமாளிக்கின்றது தெரிந்துகொள்ள வேண்டாமா நாம்? என்று வினாத் தொடுக்கிறார் சேஃப்.
காலை காபியில் "ஹீரோ" தான்! அது காஃபின் இல்லை!!
இப்போது ஆய்வில் வரும் ட்விஸ்ட் இதுதான்! இதுநாள் வரைக்கும் கருப்பு காபியின் எல்லா க்ரெடிட்டும் காஃபின் என்ற வேதிப்பொருளுக்குத்தான் கொடுத்தோம். ஆனால், இந்த ஆய்வு கண்டுபிடித்துச் சொல்வதன் மூலம் கதையே வேறாயிடுச்சே?
"காஃபின் அந்த NR4A1 என்ற உணர்வேற்பியைப் பிடிக்கிறதுதான். ஆனால், ஆய்வு மாதிரிகளில் அது பெரிதாக ஒன்றும் வேலை செய்யவில்லை," என்கிறார் சேஃப். மாறாக கஃபேயிக் அமிலம் போன்ற பாலிஹைட்ராக்ஸி மற்றும் பாலிபீனாலிக் வேதிப்பொருள்கள் (இவை பழங்கள், காய்கறிகளிலும் இயற்கையாகக் கிடைக்கும்) தான் இந்த ரிசெப்டரை அதிகமாகச் செயல்படுத்துகிறது!
அப்படி என்றால், காஃபின் இல்லாத காபியும்கூட ஏன்? நல்ல ஆரோக்கிய பலன்களைத் தரும் என ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இப்போது ஆய்வாளர்களுக்கு நன்கு பிடிபட்ட, புரிந்த விஷயம் என்னவென்றால், காபீன்ஸில் இருக்கும் இந்த "மறைமுக ஹீரோக்கள்"அதாவது NR4A1 என்ற உணர்வேற்பிதான், காபியின் மூலம் கிடைக்கும் சுறுசுறுப்பின் அசல் நாயகர்கள்!
ஆய்வுக் கூடத்தில் ..?
விஞ்ஞானிகள் இந்த NR4A1 வேதிப்பொருள்களை உயிரணுக்கள் மேல் செலுத்திச் சோதித்துப் பார்த்தனர். அங்கே உயிரணுக்களின் சேதம் குறைந்தது. மேலும், ஓர் அதிசயம் என்னவென்றால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மெதுவானது,
ஆனால் NR4A1 ரிசெப்டரை உயிரணுக்களிலிருந்து அகற்றினபோது, இந்த பாதுகாப்பு விளைவுகள் / வளையங்கள் எல்லாம் மறைந்து போயின. இந்த செயல்பாடுகளின் மூலம், NR4A1 உணர்வேற்பியே இந்த நன்மைகளின் மூல காரணி என்ற உண்மையும் உணர வைத்தது. அதன் பணியை உறுதிப்படுத்தியது.
இது மேஜிக் மாத்திரை / சர்வரோக நிவாரணி அல்ல
ஆனால், கவனமாக டாக்டர் சேஃப் ஓர் எச்சரிக்கை விடுக்கிறார். "இது ஒரே ஒரு பாதை மட்டும்தான். காபியில் பல ரிசெப்டர்கள், பல வழிமுறைகள் வேலையைச் செய்கின்றன." இந்த ஆய்வு வெறும் உயிரியல் வழிமுறையை ஆராய வடிவமைக்கப்பட்டது என்பது தவிர, மற்றபடி நீங்கள் காபி குடித்தால், நோய் வராதென்று அர்த்தம் அல்ல, மேலும், இது நேரடியாக நிரூபிக்க அல்ல என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்"
"இதில் இன்னும் நிறைய வேலை இருக்கிறது; ஆய்வுகள் தேவை" என்கிறார் சேஃப். "நாங்கள் அந்த தொடர்பை மட்டும்தான், மிகவும் குறைவானதாகவே கண்டுபிடித்து இருக்கின்றோம். ஆனால், அது எவ்வளவு முக்கியம் என்று இன்னும் பல சோதனைகள் வழியே புரிந்துகொள்ள வேண்டும்."
காபியின் நன்மைகளுக்குப் பின்னால்..?
பெரிய அளவிலான அவதானிப்பு ஆய்வுகள், காபி நுகர்வை அல்சைமர் நோய், பார்கின்சன் நோய், வளர்சிதை மாற்ற நோய் ஆகியவற்றின் குறைந்த அபாயத்துடன் தொடர்புப்படுத்தியுள்ளன. இருப்பினும், இந்த ஆய்வுகள் பொதுவாகத் தொடர்புகளை மட்டுமே காட்டியுள்ளன - காபி எப்படி துல்லியமாகப் பாதுகாப்பு விளைவுகளை உருவாக்குகிறது என்பதை விளக்கவில்லை.
நிறைவாக ஒரு புன்சிரிப்பு..!
உங்கள் காலையின் கருப்பு பானத்தைச் சுமந்து வரும் அழகான காபி கோப்பை, வெறும் தூக்கத்தை விரட்டுவதற்கான ஆயுதம் மட்டும் அல்ல - அது உங்கள் உடலுக்குள் ஓர் அமைதிக் காவலாளியை எழுப்பி, வயதாகும் சேதத்தையும், வீக்கத்தையும் சமாளிக்க உதவும் ஒரு "இயற்கையான மாய மருந்து" போலவும் இருக்கலாம்!
"காபி என்பது வேதிப்பொருள்களின் ஒரு மிகச் சிக்கலான கலவை," என்கிறார் சேஃப் புன்னகையுடன். "அது ஓர் மிகவும் சக்திவாய்ந்த கூட்டணி."
நீங்கள் அடுத்த முறை காபி கோப்பையைக் கையில் எடுக்கும்போது, உங்களின் மனத் திரைக்குள் ஓடிவருவது, "இது வெறும் கருப்பு காபி பானம் அல்ல, நம் உடலைப் பல வழிகளில் காக்கும் நுண்ணிய அளவிலான ஓர் அறிவியல் அதிசயத்தையே அருந்திக் கொண்டிருக்கிறோம்" என்ற உண்மையின் உரைகள்தான்.
ஆய்வக அளவிலானது இந்த ஆய்வு; மனிதர்களில் இதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவை.
[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]
The secret switch hidden in black coffee!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.