செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை
செம்மண் குவாரி முறைகேடு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை
செம்மண் குவாரி முறைகேடு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், போதிய சாட்சிகள் இல்லாததால் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மணிமொழி இன்று தீர்ப்பளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி எம்.எல்.ஏ, அவரது மகன் பொன். கெளதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமார், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது 2012-ஆம் ஆண்டில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்தனர்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைக் காலத்தில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட லோகநாதன் உயிரிழந்து விட்டார். எஞ்சிய 7 பேர் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 57 பேரிடம் கடந்த மார்ச் மாதம் விசாரணை முடிவடைந்தது. இதில் 30 பேர் அரசுத் தரப்புக்கு பாதகமாக சாட்சியமளித்தனா். கடந்த மாம் இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வந்தபோது, முன்னாள் அமைச்சர் க. பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் நீதிபதி முன்ஆஜராகினர். அவர்களிடம் குற்றச்சாட்டுகள் குறித்தும், அரசுத் தரப்புகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. மணிமொழி தனித்தனியே கேள்வியெழுப்பியிருந்தார்.
செம்மண் குவாரியை குத்தகைக்கு எடுத்தது உண்மைதான். ஆனால், அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாகவும், முறைகேடாகவும் செம்மண்ணை எடுக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தங்கள் மீது பொய் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகக் கூறி, பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். இந்த பதிலை முதன்மை மாவட்ட நீதிபதி பதிவு செய்து கொண்ட நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
போதிய சாட்சிகள் இல்லாததால் செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.