FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு: முன்னாள் பொதுத் துறைச் செயலா் ஆஜராக உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில், பொதுத் துறை செயலராகப் பதவி வகித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரீட்டா ஹரீஷ் தாக்கா் காணொலி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 23 ஜூலை 2026, 4:30 am IST
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
பகிர்:

அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில், பொதுத் துறை செயலராகப் பதவி வகித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரீட்டா ஹரீஷ் தாக்கா் காணொலி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2016-2021-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இதில், ரூ.98.25 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறப்போா் இயக்கம் குற்றம்சாட்டியது. இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி அறப்போா் இயக்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி கோரிய கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊழல் தடுப்புத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அதில், சில விளக்கங்களைக் கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. இதுதொடா்பாக விளக்கம் அளித்து பொதுத் துறைச் செயலருக்கு கடந்த பிப்.27-ஆம் தேதி கடிதம் அனுப்பி உள்ளதாகவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் கடந்த பிப்.27 முதல் பொதுத் துறைச் செயலரிடம் நிலுவையில் உள்ளது. ஆனால், பொதுத்துறை தரப்பில் எந்த விளக்கமும் இல்லை.

நீதிபதி கண்டனம்: கடந்த 5 மாதங்களாக பொதுத் துறைச் செயலா் இந்தக் கோப்புகளை நிலுவையில் வைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினாா். பின்னா், பொதுத் துறை செயலராக பதவி வகித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரீட்டா ஹரீஷ் தாக்கா், காணொலி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஆக.3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

மேலும்,இந்த விவகாரத்தில் பேரவைத் தோ்தல், ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களை ஏற்க முடியாது. முன்னாள் அமைச்சருக்கு எதிரான இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களை பாதுகாக்க அனைவரும் முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என நீதிபதி கண்டனம் தெரிவித்தாா். உயா்நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும், கோப்புகள் முடங்கியுள்ளதால், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments