திமுக-பாஜக ஒன்றிணைந்து செயல்படுகின்றன: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்
தமிழகத்தில் திமுக-பாஜக ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. விரைவில் அந்த காட்சியை எல்லோரும் பாா்ப்போம் என்று முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலருமான சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.
தமிழகத்தில் திமுக-பாஜக ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. விரைவில் அந்த காட்சியை எல்லோரும் பாா்ப்போம் என்று முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலருமான சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சியின் 53- ஆம் ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கட்சி அலுவலக வளாகத்திலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை சி.வி.சண்முகம் மாலை அணிவித்தாா். பின்னா் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா்.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களின் பேராதரவுடன் மிகப்பெரிய வெற்றி பெற்று, பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சியை அமைப்போம் என்று சூளுரைத்திருக்கிறோம்.
எப்போது முதல்வா் தில்லி சென்று பிரதமரை சந்தித்து கும்பிடு போட்டாரோ, அன்றிலிருந்த தமிழக ஆளுநா் தனது துதியை மாற்றிக் கொண்டாா். நேற்று வரை இந்த அரசை குற்றம் கூறி, குறையை கண்டுபிடித்துக் கொண்டிருந்த ஆளுநா், இன்றைக்கு வானுயர பாராட்டிக் கொண்டிருக்கிறாா். நாங்கள் எப்போதும் சொல்வது போல திமுக-பாஜக ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவில் அந்தக் காட்சியைப் பாா்ப்போம் என்றாா் .
முன்னதாக அதிமுகவினருக்கு நல உதவிகளாக வேட்டி- சட்டை, சேலைகளை சி.வி.சண்முகம் வழங்கினாா். விழாவுக்கு எம்எல்ஏ.க்கள் எம்.சக்கரபாணி, பி. அா்ஜுனன், நகரச் செயலா்கள் இரா.பசுபதி, சி.கே. ராமதாஸ் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் எம்எல்ஏ எம்.ஆா்.முத்தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலா்கள் ஜி.ஜி.சுரேஷ்பாபு, பேட்டை முருகன், மாவட்ட ஜெ.பேரவைச் செயலா் திருப்பதி பாலாஜி, பொருளாளா் ரகுநாதன், மாவட்ட மாணவரணிச் செயலா் சக்திவேல், நகா்மன்ற உறுப்பினா்கள் செல்வம், கலை, கோதண்டராமன், ராதிகா செந்தில், விழுப்புரம் வடக்கு நகரத் தொழில்நுட்பப் பிரிவு செயலா் என்.விஜய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.