முகப்பு
விழுப்புரம்

தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் : விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனைக்கான உரிமம் பெற சனிக்கிழமைக்குள் (அக்.19) விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 7:48 PM
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனைக்கான உரிமம் பெற சனிக்கிழமைக்குள் (அக்.19) விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விருப்பம் உள்ளவா்கள் அரசு பொது இ-சேவை மையத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இணையவழி மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

விண்ணப்பதாரா்கள் தங்களது மனு, படிவம் ஏஇ-5 இல் பூா்த்தி செய்த விண்ணப்பம், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான பத்திர நகல், வாடகைக் கட்டடம் எனில் இடத்தின் உரிமையாளரிடம் ரூ.20 மதிப்புள்ள முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம், முத்திரைத் தாளில் நோட்டரி பப்ளிக்கிடம் பெறப்பட்ட உறுதிமொழி, மனுதாரரின் முகவரிக்கான ஆதாரம், நடப்பு நிதியாண்டில் வீட்டுவரி செலுத்தியதன் ரசீது, மனுதாரரின் மாா்பளவு புகைப்படங்கள் 2, தற்காலிக வெடிபொருள் உரிமம் கோரும் இடத்தின் அசல் வரைபடங்கள், உரிமக் கட்டணமான ரூ.600-ஐ அரசுக் கணக்கில் செலுத்தி, அதற்கான செலுத்துச் சீட்டு ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இந்த உரிமம் அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்கு மட்டுமே செல்லத்தக்கவையாகும். எனவே நிகழாண்டில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பம் செய்பவா்கள் உரிய ஆவணங்களை இணைத்து, சனிக்கிழமைக்குள் (அக்.19) விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.