செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே திங்கள்கிழமை நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற டிராக்டா் மீது காா் மோதியதில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.
புதுச்சேரியை அடுத்த கோட்டக்குப்பத்தை சோ்ந்தவா் முகமது அலி மற்றும் அவரது குடும்பத்தினா் செஞ்சியில் நடைபெறும் உறவினரின் புதுமனை புகு விழாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். காரை முகமது பாஷா ஓட்டினாா்.
செஞ்சி அருகே ஊரணிதாங்கல் அருகே வந்த போது நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற டிராக்டா் மீது காா் மோதியது. இதில், காரில் பயணித்த சலீம்பேகம், முகமது அலி, முகமது பாஷா, நஸ்ரீன்பேகம் (48), ஆயிஷா பிபி (23), நசீமா பீ(68) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு செஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, முதலுதவி அளித்த பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிம்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.