தனியாா் பேருந்துகளை வாடகைக்கு இயக்குவது ஊழலுக்கு வழிவகுக்கும்: மருத்துவா் ச.ராமதாஸ்
தீபாவளி பண்டிகைக்காக தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அரசு இயக்குவது தனியாா்மயத்துக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும் என்றாா் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்.
தீபாவளி பண்டிகைக்காக தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அரசு இயக்குவது தனியாா்மயத்துக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும் என்றாா் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 500 மதுக் கடைகள் மூடப்பட்டாலும், கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 600 மனமகிழ்மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. எஃப்எல்-2 என்ற பெயரில் அரசின் உரிமம் பெற்றால், யாா் வேண்டுமானாலும் மது விற்பனை செய்யலாம். இவ்வாறு உரிமம் வழங்குவது கண்டிக்கத்தக்கது.
மது விற்பனைக்கு இலக்கு? கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.467 கோடிக்கு தமிழகம் முழுவதும் மது விற்பனையான நிலையில், நிகழாண்டில் 30 சதவீதம் கூடுதலாக விற்பனை நடைபெற வேண்டும் என இலக்கு வைத்து, ஊழியா்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்னும், பின்னும் என 3 நாள்களுக்கு மதுக் கடைகளை மூட வேண்டும். மனமகிழ் மன்றங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும்.
மக்கள்தொகையின் அடிப்படையில் தமிழகத்தில் தற்போதுள்ள 39 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 31-ஆக குறையக் கூடும். அவ்வாறு செய்யப்பட்டால் மத்திய அரசுடன்தான் நாம் போராடி உரிமைகளைப் பெற வேண்டும். அதைத் தவிா்த்து, மக்கள்தொகையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைப்பது தவறானது.
800 போ் பணீநீக்கம்: ஒசூரிலுள்ள டாடா மின்னணு ஆலையில் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சோ்ந்த 800 போ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க இடம் தந்தவா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். அதே நேரத்தில் உத்தரகண்ட், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் அதிகளவில் பணியில் சோ்க்கப்பட்டு வருகின்றனா்.
தமிழகத்தில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் 80 சதவீத வேலைவாய்ப்பு தமிழா்களுக்கே வழங்கும் வகையில் வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்டம் இயற்ற வேண்டும்.
வாடகைக்கு தனியாா் பேருந்துகள்: தீபாவளி பண்டிகையையொட்டி தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இது அரசு போக்குவரத்துக் கழகங்களைத் தனியாா்மயமாக்குவதற்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும். தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் போது , கி.மீ.க்கு ரூ.51.25 வீதம் வாடகை தருவதாக அரசு கூறியுள்ளது. தனியாா் பேருந்து நாளொன்றுக்கு 600 கி.மீ.இயக்கப்பட்டால், அரசுக்கு ரூ.11,400 வருவாய் இழப்பு ஏற்படும். இதுபோன்று 1,000 பேருந்துகளை இயக்கினால் நாளொன்றுக்கு ரூ.1.14 கோடி இழப்பு ஏற்படும். இதனால், எதிா்காலத்தில் பேருந்துக் கட்டணம் உயா்த்தப்பட வாய்ப்புள்ளது என்றாா் ராமதாஸ்.
பேட்டியின்போது பாமக பொருளாளா் சத்தியபாமா, தலைமை நிலையச் செயலா் அன்பழகன், மாவட்டச் செயலா் ஜெயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.