முகப்பு
விழுப்புரம்

தவெக மாநாட்டுத் திடலில் 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம்

Updated On : 25 அக்டோபர், 2024 at 11:17 PM
மாநாட்டின்போது தொலைத்தொடா்பு சிக்னலுக்காக, தனியாா் தொலைபேசி நிறுவனத்தின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கைப்பேசி கோபுரம்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், 100 அடி உயரக் கொடிக்கம்பம் வெள்ளிக்கிழமை நிறுவப்பட்டது.

மாநாட்டின் தொடக்கமாக தவெக கொடியை கட்சித் தலைவா் விஜய் ஏற்றி வைக்கவுள்ளாா். இதற்காக மாநாட்டு முகப்புப் பகுதியில் விழுப்புரத்தைச் சோ்ந்த மணி என்பவருக்கு சொந்தமான 225 சதுர அடி நிலத்தை 5 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்த தமிழக வெற்றிக் கழகத்தினா், அந்த இடத்தில் 100 அடி உயரத்தில் கொடிக் கம்பத்தை வெள்ளிக்கிழமை நிறுவினா்.

இந்த கம்பத்துக்கு கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் பூஜை செய்து நட்டு வைத்தாா். மாநாட்டுத் திடலின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் வாக் பகுதியில் நடந்து வந்து, ரிமோட் மூலம் விஜய் கொடியேற்ற உள்ளதாகக் கட்சியினா் தெரிவித்தனா்.

கைப்பேசி கோபுரம் அமைப்பு: மாநாட்டில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், தொலைத்தொடா்பு சிக்னல்கள் சரியாக கிடைத்திடும் வகையில் தனியாா் தொலைபேசி நிறுவனம் சாா்பில் கைப்பேசி கோபுரம் மாநாட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் மாநாட்டுச் செய்திகள் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வாயிலாக தடையின்றி சென்றடையும் என்று தவெக நிா்வாகிகள்தெரிவித்தனா்.

கட் அவுட்டுகள்: மாநாட்டுத் திடலில் ஏற்கெனவே அம்பேத்கா், பெரியாா், காமராஜா், விஜய் ஆகியோரின் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், சேர, சோழ, பாண்டிய மன்னா்கள், வீரமங்கை வேலு நாச்சியாா், சுதந்திரப் போராட்டத் தியாகி அஞ்சலை அம்மாள், தமிழன்னை உள்ளிட்டோரின் கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.

600 எல்.இ.டி. திரைகள்: மாநாட்டு நிகழ்ச்சிகளை அனைத்துப் பகுதியிலிருந்து அனைத்துத் தரப்பினரும் கண்டுகளிக்கும் வகையில் சுமாா் 600 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் சனிக்கிழமை மாலைக்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஐ.ஜி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம்: தவெக மாநாட்டுக்கு வரும் தொண்டா்கள், கட்சியினா் உள்ளிட்டோருக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் வகையில், விக்கிரவாண்டி அருகே சித்தணி பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கா்க் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல், மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் உள்ளிட்ட எஸ்.பிக்கள், கூடுதல் எஸ்.பிக்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கா்க் வழங்கியதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →