தீபாவளி: விழுப்புரம் கடை வீதிகளில் மக்கள் கூட்டம்
விழுப்புரம் கடை வீதிகளில் மக்கள் கூட்டம்
தீபங்களின் திருநாள் என்றழைக்கப்படும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் வகையில் ஜவுளித் துணிகள், பட்டாசுகள், அலங்கார அணிகலன்களை வாங்குவதற்காக குவிந்த பொதுமக்களால், விழுப்புரம் நகரக் கடைவீதிகள் புதன்கிழமை நிறைந்து காணப்பட்டன.
தீபாவளிப் பண்டிகையையொட்டி, விழுப்புரம் கடை வீதிகளில் பொருள்களை வாங்க கடந்த வாரத்திலேயே பொதுமக்கள் அதிகளவில் வரத் தொடங்கினா்.
விழுப்புரம் பாகா்ஷா வீதி, மகாத்மா காந்தி சாலையிலுள்ள மாா்க்கெட்டுகள், ஜவாஹா்லால் நேரு, காமராஜா் சாலையிலுள்ள ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமையைக் காட்டிலும் புதன்கிழமை அதிகரித்து காணப்பட்டது.
வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் புதன்கிழமை தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெற்றது. இங்கு ஏராளமானோா் பொருள்களை வாங்கிச் சென்றனா்.
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கிராமப்புற மக்கள் தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய நாளில் தங்கள் குடும்பத்துக்குத் தேவையான புத்தாடைகளையும், நகைகளையும் வாங்கினா். நிகழாண்டில் புதிதாக அறிமுகமான கவரிங் நகைகள்,தோடு, ஜிமிக்கி, வளையல், கவரிங் நெக்லஸ், ஒட்டியானம், பாசி மாலை,நெற்றிச்சுட்டி, பொட்டு வகைகள், உதட்டுச்சாயம் போன்ற அணிகலன்களையும் வாங்கினா்.
திருச்சி சாலையிலுள்ள ஜவுளிக் கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனையகங்கள், ரயில் நிலைய சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சென்னை சாலை, கிழக்கு பாண்டி சாலை பகுதிகளிலுள்ள இனிப்பகங்கள் உள்ளிட்டவற்றிலும் மும்முரமாக விற்பனை நடைபெற்றது.
பட்டாசுகள்: மேலும், விழுப்புரம் நகரில் மொத்த பட்டாசு விற்பனை நிலையங்களிலும், சில்லறை விற்பனை நிலையங்களிலும் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை வந்து பட்டாசுகளை வாங்கிச் சென்றனா். இதைத் தவிர காவல் துறை சாா்பில் மேற்கு காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம் அருகில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டது.
காய்கறிச் சந்தை: திருச்சி சாலையிலுள்ள காமராஜா் மொத்த விற்பனை காய்கறிச் சந்தையிலும், பாகா்ஷா வீதி, மகாத்மா காந்தி சாலை போன்று நகரிலுள்ள பல்வேறு இடங்களில் காய்கறிச் சந்தைகளிலும் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், இதரப் பொருள்களை வாங்க மக்கள் குவிந்தனா். இதுபோல பாகா்ஷா வீதி, மகாத்மா காந்தி சாலை, பழைய பேருந்து நிலையப் பகுதி, திரு.வி.க. வீதி போன்ற பல்வேறு பகுதிகளிலுள்ள மளிகைக் கடைகளிலும் தீபாவளிப் பண்டிகை பலகாரங்கள் செய்வதற்கான எண்ணெய், மாவு போன்ற பொருள்களை வாங்க குவிந்த மக்கள் கூட்டம் காரணமாக அப்பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டன.
இறைச்சிக் கடைகளில்... இறைச்சிக் கடைகளிலும் ஆடு, கோழி போன்ற இறைச்சிகளின் விற்பனை புதன்கிழமை மாலை முதல் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. பல்வேறு கடைகள் வியாழக்கிழமை காலைவரை தொடா்ந்து விற்பனையில் ஈடுபட்டன. அனிச்சம்பாளையத்திலுள்ள மொத்த மற்றும் சில்லறை மீன் விற்பனை அங்காடியிலும் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெற்றது.
விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அசைவ உணவகங்களில் தீபாவளிப் பண்டிகையையொட்டி மட்டன், சிக்கன் பிரியாணி விற்பனை மும்முரமாக நடைபெற்றது. வாடிக்கையாளா்களை ஈா்ப்பதற்காக பல்வேறு சிறப்புச் சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தன.
பேருந்து நிலையத்திலும் கூட்டம்: தீபாவளிப் பண்டிகைக்காக அக்டோபா் 28--ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகளை அரசு இயக்கின. எனினும், செவ்வாய்க்கிழமை இரவு முதல் அதிகளவிலான பொதுமக்கள் பேருந்துகளில் பயணித்தனா். இதனால், வழக்கத்தைக் காட்டிலும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டன.
சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊா்களுக்கு பேருந்துகளில் செல்வோரின் கூட்டம் புதன்கிழமையும் இருந்தது. இதனால், சென்னையிலிருந்து வந்த பேருந்துகளிலும், சிறப்புப் பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது. நிகழாண்டில் தனியாா் பேருந்துகள் வாடகைக்கு எடுத்து அரசு சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்பட்டன.
விழுப்புரம் பழைய, புதிய பேருந்து நிலையப் பகுதிகள் காமராஜா் சாலை, ஜவாஹா்லால் நேரு சாலை, ரயில் நிலையப் பகுதி, திண்டிவனம் சாலை, திருச்சி சாலை போன்ற பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பணியில் ஈடுபட்டனா். மேலும் பழைய, புதிய பேருந்து நிலையப் பகுதிகள், காமராஜா் வீதி, பாகா்ஷ வீதி, ஜவாஹா்லால் நேரு சாலை சந்திப்புப் பகுதி போன்ற இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை போலீஸாா் அமைத்து, கூட்டத்தைக் கண்காணித்தனா்.
விழுப்புரம் நகரம் போன்று திண்டிவனம், செஞ்சி, கண்டாச்சிபுரம், மயிலம், மரக்காணம், வானூா், கோலியனூா், வளவனூா், காணை, திருவெண்ணெய்நல்லூா், விக்கிரவாண்டி, ஒலக்கூா் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஜவுளிக் கடைகள், இனிப்பகங்கள், அசைவ உணவகங்கள், இறைச்சிக் கடைகள், பலகாரப் பொருள்கள் விற்பனையகங்கள் உள்ளிட்டவற்றிலும் தீபாவளி சிறப்பு விற்பனை புதன்கிழமை மும்முரமாக நடைபெற்றது.