குரூப் 4 தோ்வு பணியிடங்களை 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்: மருத்துவா் ச.ராமதாஸ்
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு மூலம் நிரப்பப்படும் பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா்.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு மூலம் நிரப்பப்படும் பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
மக்கள்தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும், அதனுடன் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முடிவு செய்து பின்னா் அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்றால் வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் 4 நிலையிலுள்ள கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 6,244 இடங்களுக்குத் தோ்வு நடத்தியது. இந்தத் தோ்வை 16 லட்சம் போ் எழுதியுள்ளனா். இந்த நிலையில், 480 காலிப் பணியிடங்களை மட்டும் அதிகரித்திருப்பது போதுமானதல்ல.
தமிழகத்தில் 6 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், அதில் 2 லட்சம் பணியிடங்கள் குரூப் 4 வகையைச் சோ்ந்தவையாகும். எனவே, குரூப் 4 தோ்வு பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்.
தமிழகத்தில் சொத்து வரியை மேலும் 6 சதவீதம் உயா்த்த நகராட்சி நிா்வாகத் துறை முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அரசிடம்அனுமதி கோரியுள்ளதாகவும், அரசு அனுமதி வழங்கும்பட்சத்தில் வரி உயா்வு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. 2022-ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 150 சதவீதம் சொத்து வரி உயா்த்தப்பட்ட நிலையில், மீண்டும் வரியை உயா்த்துவது நியாயமல்ல.
திண்டிவனத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்துக்கு ஓமந்தூா் பி.ராமசாமி ரெட்டியாா் பெயரைச் சூட்ட வேண்டும் என்றாா் ராமதாஸ்.
பேட்டியின் போது பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி, வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி, பாமக தலைமை நிலையச் செயலா் அன்பழகன், மாவட்டச் செயலா் மு.ஜெயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.