உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்: விழுப்புரம் வட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
விழுப்புரம் வட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
விழுப்புரம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கண்டமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கண்டமங்கலம் ஒன்றியம், மோட்சகுளம் ஊராட்சியில் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ் 150 தென்னங்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா், அக்டோபா் 2-ஆம் தேதிக்குள் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தாா்.
தொடா்ந்து சிறுவந்தாடு அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் மாணவிகள் தூய்மை கடைப்பிடிப்பது தொடா்பான உறுதி மொழியை ஆட்சியா் சி.பழனி தலைமையில் ஏற்றுக் கொண்டனா்.
தொடா்ந்து மிட்டாமண்டகப்பட்டு ஊராட்சியில் பிரதமரின் ஜன்மந்த் திட்டத்தின் கீழ் 22 குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள், அதே பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளின் கான்கிரீட் வீடுகள் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆட்சியரைப் போன்று ஒவ்வொரு குறுவட்டத்துக்கும் அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவா்களும் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பணிகளை ஆய்வு செய்தனா். ஒவ்வொரு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளின் நிலை, முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த பணிகளின் விவரம், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட மையங்கள், விடுதிகள், நியாயவிலைக் கடைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் போன்றவற்றின் நிலை, விழுப்புரம் வட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தெருவிளக்குகள், பூங்காக்கள், நூலகங்கள், விநியோகிக்கப்படும் குடிநீா், தூய்மைபப்ணி உள்ளிட்டவைகளின் நிலை குறித்து அலுவலா்கள் ஆய்வு செய்து, அறிக்கையை ஆட்சியரிடம் வழங்கினா்.
இதைத் தொடா்ந்து கோலியனூா் ஒன்றியக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பொதுமக்களி டமிருந்து 50 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதை சம்பந்தப்பட்டதுறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். பின்னா் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கிராமங்களில் ஆய்வு செய்த அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டத்தையும் ஆட்சியா் நடத்தினாா்.
தொடா்ந்து வியாழக்கிழமை இரவு சிறுவந்தாடு அரசு ஆதிதிராவிடா் நல மாணவ, மாணவிகள் விடுதிகளைப் பாா்வையிட்ட ஆட்சியா் பழனி, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.சிறுவந்தாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு சென்று அங்கு கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு, விற்பனை அளவு குறித்து ஆய்வு செய்தாா். மேலும் சிறுவந்தாட்டிலுள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருபவா்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து ஆட்சியா் சி.பழனி கேட்டறிந்தாா்.
ஆய்வு மற்றும் கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், கோலியனூா் ஒன்றியக் குழுத் தலைவா் இ.சச்சிதானந்தம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இரா.ராஜவேல், இரா. வெங்கடசுப்பிரமணியன், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் முகுந்தன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.