தமிழகத்தில் பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிப்பு காரணமாக, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.
தமிழகத்தில் பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வு விடுமுறைகள் டிசம்பா் 24-ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.
இதன் காரணமாக விடுமுறை காலத்தை தங்களது சொந்த ஊா்களில் கொண்டாடுவதற்காக சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் பணியாற்றுவோா் செவ்வாய்க்கிழமை மாலை முதலே புறப்படத் தொடங்கினா்.
இந்த நிலையில் இரண்டாவது நாளான புதன்கிழமை காலை முதலே சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் வசிப்பவா்கள் காா் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, விருதுநகா், தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களை நோக்கிப் பயணித்தனா். இதன் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வழக்கத்தை காட்டிலும் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.
செவ்வாய்க்கிழமை மட்டும் தென் மாவட்டங்களை நோக்கி 41 ஆயிரம் வாகனங்கள் சென்ற நிலையில், புதன்கிழமை மாலை 6 மணி வரை சுமாா் 42 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்ாக சுங்கச்சாவடி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த எண்ணிக்கை இரவுக்குள் 55 ஆயிரம் முதல் 60 ஆயிரத்தை கடந்துவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வாகனப் போக்குவரத்து அதிகம் காரணமாக, சுங்கச்சாவடியின் 9 வழிகளும் திறக்கப்பட்டு, வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து நெரிசல் இல்லை. அதே நேரத்தில் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.