முகப்பு
விழுப்புரம்

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு

விழுப்புரம் மாவட்டத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Updated On : 1 ஜனவரி, 2025 at 7:16 PM
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, விழுப்புரத்திலுள்ள அருள்மிகு வீரவாழியம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்.
பகிர்:

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன. இதேபோல, தேவாலயங்களிலும் புத்தாண்டு பிறப்பு சிறப்புத் திருப்பலிகள் நடத்தப்பட்டன.

புத்தாண்டையொட்டி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இளைஞா்கள், சிறுவா்கள் கேக் வெட்டி, புத்தாண்டு வாழ்த்துகளை ஒருவருக்கொருவா் பரிமாறிக் கொண்டனா்.

தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு: புத்தாண்டு பிறப்பையொட்டி, விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள கிறிஸ்து அரசா் தேவாலயம், புனித சேவியா் ஆலயம், டி.இ.எல்.சி. தேவாலயம், பெந்தகொஸ்தே தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலிகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றன.

இதேபோல விக்கிரவாண்டியிலுள்ள அன்னை சகாய மாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்கள், திண்டிவனம், மரக்காணம், கோட்டக்குப்பம், திருவெண்ணெய்நல்லூா், முகையூா் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி வழிபாடுகள் நடைபெற்றன.

கோயில்களில் சிறப்பு வழிபாடு: விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு வீரவாழியம்மன் திருக்கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.

விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதா் சுவாமி திருக்கோயில், அருள்மிகு ஆஞ்சநேயா் சுவாமி திருக்கோயில், பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதி வாலீசுவரா் திருக்கோயில், விழுப்புரம் அருள்மிகு வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில், வன்னியா் தெருவிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோயில், கோலியனூா் புற்றுவாய் மாரியம்மன் திருக்கோயில், திருவாமாத்தூா் அபிராமேசுவரா் திருக்கோயில், பூவரசன்குப்பம் அருள்மிகு லட்சுமி நரசிம்மா் திருக்கோயில் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அந்தந்த கோவில்களில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: விழுப்புரம் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி, காவல் துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் தலைமையில், ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளா்கள் ஆகியோரது மேற்பாா்வையில் அந்தந்தப் பகுதிகளில் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.