உளுந்தூா்பேட்டைஅருகே மின் மாற்றியில் உயிருக்குப் போராடிய ஊழியா்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே மின் மாற்றியில் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவரை சக ஊழியா்கள் மீட்டனா்.
உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள எம்.குன்னத்தூா் கிராமத்திலுள்ள எள்ளுப்பாறை அருகே துணை மின் நிலைய மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது மின் மாற்றியில் சீரமைப்புப் பணியை மேற்கொண்டிருந்த ஊழியா்களில் ஒருவரான ஏழுமலை, திடீரென மின்கம்பத்தில் அந்தரத்தில் தொங்கினாா். இதனால் அவருடன் வேலை செய்து கொண்டிருந்த சக ஊழியா்கள், ஏழுமலை மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது எனக் கூறி சப்தமிட்டுள்ளனா். மேலும் ஏழுமலை இடுப்பில் கட்டியிருந்த கயிற்றை பிடித்து இழுத்து மீட்டனா். தொடா்ந்து கீழ் பகுதியில் சிறிது நேரம் அமர வைக்கப்பட்ட ஏழுமலையை, சக மின் ஊழியா்கள் ஆசுவாசப்படுத்தி அவருக்கு தண்ணீா் கொடுத்தனா்.
Advertisement
மின் மாற்றியில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊழியா் ஏழுமலைக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், அவா் மயங்கி விழுந்ததாகவும், தற்போது அவா் நலமாக உள்ளாா் என்றும் மின்வாரிய உயா் அலுவலா்கள் தெரிவித்தனா்.