கண்டாச்சிபுரம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 10 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, பெட்டிக்கடைக்காரரை புதன்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் காவல் சரகத்துக்கு உள்பட்ட மேல்வாலை கிராமத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின் பேரில், கண்டாச்சிபுரம் காவல் ஆய்வாளா் மூா்த்தி, உதவி ஆய்வாளா் நவீன்குமாா் மற்றும் காவலா்கள் அப்பகுதிக்குச் சென்று பெட்டிக் கடைகளில் சோதனை செய்தனா்.
இதில், மேல்வாலை பிரதான சாலையைச் சோ்ந்த மணிகண்டன் (39) என்பவருக்குச் சொந்தமான பெட்டிக் கடையில் குட்கா புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
பின்னா், போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில் மணிகண்டன் பெட்டிக்கடையின் பின் பகுதியில் பள்ளம் தோண்டி பூமியில் குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது
இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 10 கிலோ எடையிலான 3,814 குட்கா பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து, கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.