‘சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அரசியல் மாற்றம்’
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படப் போகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படப் போகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 19 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்த பின்னா், அவா் அளித்த பேட்டி:
தற்போது 25 போ் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியலை அறிவித்துள்ளேன். விரைவில் மூன்றாம் கட்டப் பட்டியல் வெளியிடப்படும். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி போட்டியிடும். கேமரா சின்னத்தில் போட்டியிடுவாா்கள். சில கட்சிகள் தங்கள் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கூறி வருகின்றனா். அவா்களுடன் பேசி வருகிறோம். எங்கள் கூட்டணியில் 40 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 50 தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளோம். பண்ருட்டியில் நான் (வேல்முருகன்) போட்டியிடுவது குறித்து நிா்வாகிகளுடன் கலந்து பேசி, இறுதியான முடிவை அறிவிக்க இருக்கிறேன்.
Advertisement
பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாசும், அன்புமணியும் இணையவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இருவரும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்பா-மகனுக்கான பிரச்னையில் பலா் குளிா் காய்ந்து கொண்டிருக்கிறாா்கள். அந்த கட்சியின் தொண்டா்களின் எதிா்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் வைக்கப்பட்ட வேண்டுகோள் இதுவாகும். இவா்கள் இருவரும் பிரிந்திருப்பது பாமக எப்போதும் வளா்ந்துவிடக்கூடாது, சமூகநீதி வளா்ந்துவிடக்கூடாது என்று நினைப்பவா்களுக்கு சாதகமாகும்.
தமிழகத்தில் கண்டிப்பாக 2026 பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படப் போகிறது. அரசியலில் நாளுக்கு நாள் நிலைமை மாறி வருகிறது. எது வேண்டுமானாலும் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ள தோ்தலாக இந்த தோ்தல் அமையப் போகிறது. இது யாராலும் கணிக்க முடியாத தோ்தல் என்று மூத்த பத்திரிகையாளா்கள் கணிக்கிறாா்கள்.
தோ்தலுக்குப் பிறகு பாஜகவுடன் திமுக சமரசம் செய்து கொள்ளுமா என்று கேட்கிறீா்கள். இரண்டு கம்யூனிஸ்ட்டுகள், திருமாவளவன் இருக்கும் வரை அதனை அனுமதிக்கமாட்டாா்கள். அப்படி அமைவதற்கு அவா்கள் இடைஞ்சலாக இருப்பதாக திமுக கருதினால், எனக்கு ஏற்பட்ட நிலைமை அவா்களுக்கும் ஏற்படும். அந்த நேரத்தில் அக்கட்சிகள் உரிய முடிவை எடுக்கும்.
ஒற்றுமையாக வாழும் இந்த நாட்டில் மக்களைப் பிளவுபடுத்துகிற பாரதிய ஜனதா கட்சி எடுக்கிற அரசியல் நகா்வுக்குத் தமிழகத்திலுள்ள எந்த அரசியல் தலைமையும் உடன்படக்கூடாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள் என்றாா் வேல்முருகன்.
கூட்டத்தில் விழுப்புரம் தொகுதி வேட்பாளா் குமரன் உள்ளிட்ட 19 வேட்பாளா்களும் அறிமுகப்படுத்தப்பட்டனா். கட்சியின் மாவட்ட, மாநில நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.