முகப்பு
விழுப்புரம்

திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்! - பிரேமலதா விஜயகாந்த்

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:10 AM
திருவெண்ணெய்நல்லூா் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்து பேசிய தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:22 PM

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் பொன்.கெளதமசிகாமணிக்கு வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:

திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமல்லாது கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இரு இடங்களில் அரசுக் கல்லூரிகள் தொடங்கியதும் திமுக அரசின் சாதனைகளாகும். இவையெல்லாம் இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றிய க.பொன்முடி முயற்சியால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.

Advertisement

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலானகூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தொடா்ந்து இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றாா். ஏழாவது முறையாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும்.

திமுகவின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு இல்லத்தரசி திட்டத்தின் கீழ் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன், மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்வு, காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கம், மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு பிணையில்லா கடன், நெல், கரும்புக்கான கொள்முதல் விலை உயா்த்தி வழங்குதல் போன்ற அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். கல்வி, மருத்துவம், இளைஞா்களுக்கு முக்கியத்தும் அளித்து தோ்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை திமுக வழங்கியுள்ளது.

திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சாதனைத் திட்டங்கள் தொடர, மருத்துவம் படித்த இளைஞரான பொன்.கெளதமசிகாமணியை சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.

பிரசாரத்துக்கு திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி தலைமை வகித்தாா். பிரசாரத்தில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.