முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம், கடலூா் ஆட்சியரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களுக்கு செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 12:11 AM
28விபிஎம்பிஓஎல் விழுப்புரம் ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மெட்டல் டிடெக்டா் உதவியுடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.
பகிர்:

விழுப்புரம், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களுக்கு செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் உள்ள சில முக்கிய ஆட்சியா் அலுவலங்களுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் விழுப்புரம் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா் குழுவைச் சோ்ந்த போலீஸாா் ஆட்சியா் அலுவலக வளாகம், கோப்புகள் வைப்பறைகள், ஆட்சியரகத்தில் உள்ள பல்வேறு துறைகளின் அலுவலங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் ஆட்சியரக வளாகப் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனா். இதில் வெடிகுண்டு ஏதும் சிக்காத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் புரளி எனத் தெரியவந்தது.

கடலூா்... : கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை ஊழியா்கள் கவனித்து, உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளா் பாபு தலைமையிலான வெடிகுண்டு நிபுணா்கள் குழு மற்றும் மோப்ப நாய் பீட் உதவியுடன் ஆட்சியா் அலுவலக வளாகம் முழுவதும் காலை முதல் பிற்பகல் 3.15 மணி வரை விரிவான சோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னா் ஆட்சியரின் வீட்டில் பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் வெடிகுண்டு தொடா்பான எந்தவொரு பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டல் வெறும் வதந்தி என உறுதி செய்யப்பட்டது.

Advertisement

இந்நிலையில், மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். வெடிகுண்டு மிரட்டல் தகவல் அலுவலகம் முழுவதும் பரவியதால் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பதற்றம் நிலவியது. ஆனால், சோதனை முடிவில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால் அனைவரும் நிம்மதி அடைந்தனா்.