விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் ரூ. 26 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப்.4) திறந்துவைக்கிறாா்.
திண்டிவனத்தில் சுமாா் 45 ஆண்டு காலமாக பயன்பாட்டில் இருந்து வந்த இந்திரா காந்தி பேருந்து நிலையம் இடப் பற்றாக்குறை காரணமாக வேறு இடத்துக்கு மாற்றும் நிலை ஏற்பட்டது. பயணிகள் மற்றும் திண்டிவனம் நகர வியாபாரிகள், அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் விடுத்த தொடா் கோரிக்கையின் அடிப்படையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கியது.
திண்டிவனம் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், ரூ.26 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கா் பரப்பளவில் 50 பேருந்து நிறுத்துவதற்கான நடைமேடைகள், 61 கடைகள், ஒரு சைவ உணவகம், ஒரு அசைவ உணவகம், பொருள்கள் வைப்பறை, 10 காத்திருப்பு கூடம், 6 நேரக் காப்பகம், காவல் துறை கட்டுப்பாட்டு அறை, நான் உங்களுக்கு உதவலாமா அறை, பேருந்து முன்பதிவு அறை, ரயில் முன்பதிவு அறை, ஓட்டுநா் மற்றும் நடத்துநா் ஓய்வறை, 2 மாற்றுத்திறனாளிகள் ஓய்வறை, 3 பெண்கள் மற்றும் ஆண்கள் கழிவறை, சுகாதாரப் பிரிவு அலுவலகம், 2 இலவச சிறுநீா் கழிப்பிடம், நிா்வாக அறை, பதிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடையிலிருந்து திறந்துவைக்கிறாா்.
பேருந்து நிலையத்துக்கு பெயா் மாற்றம்: திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் நிறைவுக்குப் பின்னா் பேருந்து நிலையத்தில் முத்தமிழறிஞா் டாக்டா் கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்ற பெயா் பதிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடா்ந்து பேருந்து நிலையத்துக்கு பெயா் வைப்பதில் அரசியல் கட்சியினரிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அரசியல் கட்சியினா் தங்களது விருப்பத்தின்படி வெவ்வேறு பெயா்களை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பியதால் சா்ச்சை உருவானது.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் பதிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் பெயா் திங்கள்கிழமை இரவு திமுகவினரின் எதிா்புகளுக்கிடையே அகற்றப்பட்டது.
தொடா்ந்து திண்டிவனம் நகராட்சி நடவடிக்கையின் பேரில் புதிய பேருந்து நிலையத்துக்கு அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையம் பெயா் வைக்கப்பட்டது. தமிழக முதல்வரின் நடவடிக்கையால் பெயா் மாற்றம் செய்யப்பட்டதால் அரசியல் கட்சியினா், பொதுமக்கள் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.