விழுப்புரம் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சாா்பில் 8.45 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
பிப்.10 தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி, விழுப்புரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி, விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட கீழ்பெரும்பாக்கம், அங்கன்வாடி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பங்கேற்று, குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிப் பேசியதாவது:
தேசியகுடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, 1 முதல் 19 வயதுக்குள்பட்டவா்களுக்கு அங்கன்வாடி மையங்கள், பள்ளி வளாகங்கள், கல்லூரிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள்(அல்பெண்டசோல்) வழங்கப்படவுள்ளன. இதன் தொடக்கமாக, செவ்வாய்க்கிழமை அங்கன்வாடிமைய குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக மாவட்டத்தில் உள்ள 1,788 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 1,795 பள்ளிகளில் பயிலும் 1 முதல் 19 வயதுக்குள்பட்ட 6,79,198 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுக்குள்பட்ட 1,65,955 பெண்கள் என மொத்தம் 8,45,153 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.
பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள்வழங்கப்படும். இதில் 1 முதல் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு 200 மில்லி கிராம் கொண்ட அல்பெண்டசோல் மாத்திரையும், 2 முதல் 19 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு 400 மில்லி கிராம் கொண்ட அல்பெண்டசோல் மாத்திரைகளும் வழங்கப்படும்.
பிப்.17 ஆம் தேதி விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மாத்திரைகள் வழங்கப்படும். குடற்புழு நீக்க மாத்திரைகளை உட்கொள்வதால், குழந்தைகளுக்கு இரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. நோய்த் தடுப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளா்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
மாவட்ட பொது சுகாதாரத் துறை, பள்ளிக்கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட துறைகளைச் சோ்ந்த பணியாளா்கள் மாத்திரைகள் வழங்கும் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
எனவே, மாணவ, மாணவியா்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்தைப் பயன்படுத்தி, 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் குடற்புழு நீக்க மாத்திரை உட்கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா், கோலியனூா் வட்டார மருத்துவ அலுவலா் பிரியா பத்மாசினி, விழுப்புரம் நகா் நல அலுவலா் ஸ்ரீபிரியா, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் மனோசித்ரா, மாவட்ட தாய், சேய் நல அலுவலா் அம்பிகா, கீழ்ப்பெரும்பாக்கம் மருத்துவ அலுவலா் ஜோதி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.