விழுப்புரம் மாவட்ட காவல் துறை நடவடிக்கையின்பேரில், மது, போதை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 113 வாகனங்கள் ரூ.23.32 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
மது மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மாவட்ட எஸ்.பி., வி.வி.சாய் பிரனீத் உத்தரவின்பேரில், கூடுதல் எஸ்.பி. தினகரன் முன்னிலையில், விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப் படை மைதானத்தில் வியாழக்கிழமை பொது ஏலம் விடப்பட்டது.
10 நான்கு சக்கர வாகனங்கள், 4 மூன்று சக்கர வாகனங்கள், 99 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 113 வாகனங்கள் ரூ.23,32,200-க்கு பொது ஏலத்தில் விடப்பட்டு, வசூலிக்கப்பட்ட தொகை முழுவதும் அரசு கருவூலக்கணக்கில் செலுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.