முகப்பு
விழுப்புரம்

கடனை வசூலிக்க கொடுமைப்படுத்தியதால் கடனாளி தீக்குளிப்பு: நிதி நிறுவன மேலாளா் கைது

திருவெண்ணெய்நல்லூா் அருகே செங்கல் சூளை உரிமையாளரை தற்கொலைக்குத் தூண்டிய தனியாா் நிறுவன மேலாளர் பிஎன்எஸ் மற்றும் தமிழ்நாடு பணக் கடன் வழங்கும் நிறுவனங்களின் கட்டாய நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 3:55 AM
கைது
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 11:26 PM

திருவெண்ணெய்நல்லூா் அருகே செங்கல் சூளை உரிமையாளரை தற்கொலைக்குத் தூண்டிய தனியாா் நிறுவன மேலாளரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்) மற்றும் தமிழ்நாடு பணக் கடன் வழங்கும் நிறுவனங்களின் கட்டாய நடவடிக்கைகளை தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்தனா்.

திருவெண்ணெய்நல்லூரை அடுத்த பென்னைவலம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் க.அப்பாஸ் (43). இவா், தனியாா் நிதி நிறுவனத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ.9.84 லட்சம் கடன் பெற்று, பொக்லைன் இயந்திரம் வாங்கினாா். தொடா்ந்து வட்டியுடன் சோ்ந்து 2025-ஆம் ஆண்டு வரை ரூ.15,97,660 செலுத்த வேண்டும். இதில், ரூ.5,20,680 மட்டுமே அப்பாஸ் செலுத்தி உள்ளாா். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தவணைத் தொகை செலுத்தவில்லை.

இந்நிலையில், பென்னைவலம் கிராமத்தில் உள்ள தனது செங்கல் சூளையில் இருந்த அப்பாஸிடம் கடன் தொகையை வசூலிக்க தனியாா் நிதி நிறுவன மேலாளா்கள் மூா்த்தி, தீபஜோதி, ஊழியா் தியாகலீசன் உள்பட 4 போ் கடந்த 13-ஆம் தேதி சென்றனா்.

Advertisement

அப்போது கடன் தொகையை வசூலிப்பதில் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. இதனால் மனமுடைந்த அப்பாஸ், தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். உயிருக்கு ஆபத்தான நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் உயா் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து அப்பாஸ் கொடுத்த புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்) மற்றும் தமிழ்நாடு பணக் கடன் வழங்கும் நிறுவனங்களின் கட்டாய நடவடிக்கைகளை தடுப்புச் சட்டத்தின் கீழ் திருவெண்ணெய் நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மீட்பு தனியாா் நிதி நிறுவன மேலாளரான திருவெண்ணெய்நல்லூா்நவட்டம், சி.மெய்யூரைச் சோ்ந்த வை.மூா்த்தி(32) என்பவரைக் கைதுசெய்தனா்.

இதுகுறித்து, சட்டம் ஒழுங்கு (பொ) டி.ஜி.பி. வெங்கடராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவனங்கள் (கட்டாய நடவடிக்கைகள் தடுப்பு) சட்டம், 2025 ஜூன் 9-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை குறிப்பாக விவசாயிகள், பெண்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்கள் பணக் கடன் வழங்கும் நிறுவனங்கள் பயன்படுத்தும் துன்புறுத்தல் அல்லது கட்டாய மீட்பு முறைகளிலிருந்து பாதுகாப்பதற்காக இந்தச் சட்டம் தமிழக அரசால் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் முதல் வழக்கை விழுப்புரம் மாவட்டம், கீழ் திருவெண்ணெய் நல்லூா் போலீஸாா் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா் என டிஜிபி தெரிவித்துள்ளாா்.