வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்போலீஸாா் வியாழக்கிழமை மோம்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினா்.
விழுப்புரம் ஆட்சியா் பெருந்திட்ட வளாகம் மற்றும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது.இந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
வியாழக்கிழமை வழக்கம்போல் நீதிமன்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தநிலையில், காலை 11 மணியளவில் சென்னை உயா் நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வந்த தகவலில் விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்த தகவலின் பேரில், இதையடுத்து, விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் செல்வ நாயகம் தலைமையிலான வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீஸாா் 5 குழுக்களாகப் பிரிந்து விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள்,நீதிபதிகள், வழக்குரைஞா்கள் அறைகள், நீதிமன்ற அலுவலகங்கள், பதிவேடுகள் அறைகள், பாதுகாப்பு அறைகள் மற்றும் நீதிமன்ற வளாகப் பகுதிகளில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினா்.
இதனால், நீதிமன்றப்பணியாளா்கள் வெளியேற்றப்பட்டனா். சோதனையின் நிறைவில் வெடிகுண்டு எதுவும் சிக்காதால் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
கடந்த மாதம் இதேபோல் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் நீதிமன்ற பணியாளா்களும், போலீஸாரும் அதிருப்தி அடைந்தனா்.