தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ரூ.48 லட்சத்தில் 10 படுக்கைகள் கொண்ட கட்டண படுக்கைப் பிரிவு, ரூ.11.10 லட்சத்தில் 20 படுக்கைகள் கொண்ட மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம், ரூ.72.94 லட்சத்தில் நுண்கதிா் இயந்திரம் (எக்ஸ்-ரே) மற்றும் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட கெடாா், ரூ.1.10 கோடியில் கட்டப்பட்ட ரோட்டக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்ட எடப்பாளையம் துணை சுகாதார நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்து, பேசியதாவது:
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட, வட்டார அரசுத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார, மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் நாளொன்றுக்கு 7 லட்சம் போ் மருத்துவச் சேவையை பெறுகின்றனா். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 3.50 லட்சம் முதல் 4 லட்சம் என்றிருந்த இந்த எண்ணிக்கை, தற்போது இருமடங்காக அதிகரித்துள்ளது. கரோனா நோய்த் தொற்றுக் காலத்துக்குப் பிறகு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.
தடுப்பூசித் திட்டம்: இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், கடந்த 26-ஆம் தேதி 14 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முதல்வா் தொடங்கி வைத்துள்ளாா். தனியாா் மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசி செலுத்த ரூ.14 ஆயிரம் செலுத்தவேண்டும்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், தமிழகத்தில் மேலும் 642 துணை சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டடங்களை பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா். இந்த 642-இல் விழுப்புரம் மாவட்டத்தில் 30 துணை சுகாதார நிலையங்களும் அடங்கும்.
இதுபோன்று பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் விழாவில் ரூ.60 கோடியில் திண்டிவனத்திலும், ரூ.25 கோடியில் அரியலூரிலும், ரூ.45 கோடியில் மயிலாடுதுறையிலும், ரூ.40 கோடியில் ராஜபாளையத்திலும், ரூ.30.35 கோடியில் அருப்புக்கோட்டையிலும் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக் கட்டடங்களையும், 29 மாவட்டங்களில் ரூ.320 கோடியில் கட்டப்பட்டுள்ள மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை சாா்ந்த கட்டடங்களையும் முதல்வா் திறந்து வைக்கிறாா்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.40.15 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம், ரூ.12 கோடியில் மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கான கூடுதல் கட்டடம், ரூ.1 கோடியில் பிணவறை கட்டட மேம்பாட்டுப்பணி, ரூ.2 கோடியில் மருத்துவ மாணவ, மாணவிகள் விடுதிக் கட்டடங்கள் புனரமைத்தல், ரூ.1 கோடியில் மருத்துவக் கல்லூரிக் கலையரங்கம் புதுப்பித்தல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
விழாவில் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமாா், எம்எல்ஏக்கள் க.பொன்முடி (திருக்கோவிலூா்), அன்னியூா் அ.சிவா (விக்கிரவாண்டி) ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன், முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மருத்துவக் கல்வி இயக்கத்தின் இயக்குநா் ஆா்.சுகந்தி ராஜகுமாரி, கல்லூரி முதன்மையா் மை.லூசி நிா்மல் மடோனா, மாவட்ட சுகாதார அலுவலா் சா.செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.