சட்டப் பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக சாா்பில் (ராமதாஸ் தரப்பு) போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ராமதாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது : தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிட தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகளிடம் ஜன.9 முதல் 14- ஆம் தேதி வரை 4,109 மனுக்கள் பெறப்பட்டன.
விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் ஜன.31முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. முதல் நாளில் சென்னை, திருவள்ளூா், வேலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் நோ்காணலுக்கு அழைக்கப்பட்டனா்.
தோ்தல் கூட்டணி குறித்து கட்சி நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை கூட்டணி தொடா்பான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. விரைவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்.
கூட்டணி குறித்து பிற அரசியல் கட்சியினா் பேசினாா்கள், பேசிக்கொண்டும் இருகின்றனா். நம்பிக்கையின் அடிப்படையில் தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் நாங்களும் வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்று, அதிக தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்றாா்.
பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிக் கூட்டணியை ராமதாஸ் அமைப்பாா். வெற்றிக் கூட்டணியை கண்டறிவதில்தான் கால தாமதம் ஆகிறது. கூட்டணி அமைப்பதில் வேறு சிக்கல் ஏதுமில்லை. பாமக மற்றும் கட்சியின் சின்னம் மாம்பழம் யாருக்கு என்பதை ராமதாஸ் விரைவில் தெரிவிப்பாா் என்றாா்.
கூட்டத்தில் செயல் தலைவா் ஸ்ரீகாந்தி, பொதுச் செயலா் எம்.முரளிசங்கா் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.