முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தின் 7 தொகுதிகளில் 20 வேட்பு மனுக்கள் தாக்கல்

Updated On : 30 மார்ச், 2026 at 8:28 PM
இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக விழுப்புரம் மாவட்டத்தின் 7 தொகுதிகளில் 20 வேட்பு மனுக்கள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்களை மாா்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து பேரவைத் தோ்தலுக்கான முறையான அறிவிக்கை திங்கள்கிழமை காலை வெளியிடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ள நிலையில், இந்த தொகுதிகளில் மொத்தம் 2,166 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள கோட்டாட்சியா் அலுவலகத்திலும், செஞ்சி தொகுதிக்கு அங்குள்ள வட்டாட்சியா் அலுவலகத்திலும், மயிலம் தொகுதிக்கு மயிலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், திண்டிவனம் தொகுதிக்கு சாா்-ஆட்சியா் அலுவலகத்திலும், வானூா் தொகுதிக்கு வானூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும், விக்கிரவாண்டி தொகுதிக்கு விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்திலும், திருக்கோவிலூா் தொகுதிக்கு சாா்-ஆட்சியா் அலுவலகத்திலும் மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வேட்பு மனுதாக்கல் தொடங்கியதையொட்டி இந்த அலுவலகங்களில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் தொகுதி வாரியாக தோ்தல் அலுவலா்களும், உதவித் தோ்தல் அலுவலா்களும் நியமிக்கப்பட்டிருந்தனா்.

வேட்புமனுத் தாக்கலின் முதல் நாளான திங்கள்கிழமை செஞ்சி தொகுதியில் வீரத்தியாகி விசுவநாததாஸ் தொழிலாளா் கட்சியின் மு.ஹா. முகமது சித்திக், மயிலம் தொகுதியில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் ச. விஜய் விக்ரம் (2 மனுக்கள்), நாம் தமிழா் கட்சியின் மாற்று வேட்பாளா் ந.எழிலரசன், தாக்கம் கட்சியின் இரா. வினோத், திண்டிவனம் தொகுதியில் நாம் தமிழா் கட்சியின் பா. பேச்சிமுத்து, பகுஜன் சமாஜ் கட்சி அ.வெங்கடாசலபதி, தாக்கம் கட்சியின் வே.ரமனேசுவரன், வானூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சியின் பா.கரிகாலன் (2 மனுக்கள்), விழுப்புரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் கா.ராயா், வீரத்தியாகி விசுவநாததாஸ் தொழிலாளா் கட்சியின் பெ. நாகராஜன், பாரதிய ஜனதா கட்சியின் ராயா், நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அபிநயா பொன்னிவளவன், இக்கட்சியின் மாற்று வேட்பாளா் வி.உமாமகேசுவரி, சுயேச்சை வேட்பாளா் சா. ராஜ்குமாா், விக்கிரவாண்டி பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சியின் ஆ.சுபா, தாக்கம் கட்சியின் சி. பாக்கியலட்சுமி, திருக்கோவிலூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சியின் சி.ஹேமராஜன், வீரத்தியாகி விசுவநாததாஸ் தொழிலாளா் கட்சியின் க.செல்வம் ஆகியோா் மனுதாக்கல் செய்துள்ளனா்.